இந்தியாவில் வன்முறைக்கு 2 பத்திரிகையாளர்கள் மரணம்; ஐ.நா. சபை வருத்தம்!

ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் ஆன்டனியோ குடெரசின் துணை செய்தி தொடர்பு அதிகாரி பர்ஹான் ஹக் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது,
உலகில் எந்த இடத்திலும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக துன்புறுத்துதல் அல்லது வன்முறை என்பது உண்மையில் வருத்தம் அளிக்கும் விசயம் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சமீபத்தில் பணியில் இருந்த 2 பத்திரிகையாளர்களின் மரணம் பற்றிய நிருபர்களின் கேள்வி ஒன்றிற்கு அவர் இந்த பதிலை தெரிவித்துள்ளார்.
பீகாரில் இந்தி நாளிதழில் நிருபராக பணிபுரிந்த நவீன் நிஷ்சல் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபொழுது கார் ஒன்று அவர்கள் மீது மோதியதில் 2 பேரும் பலியானார்கள்.
இதற்கு பின்னணியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அகமது அலி என்ற ஹர்சு மற்றும் அவரது மகனான தப்ளூ ஆகியோர் உள்ளனர் என நிருபரின் சகோதரர் ராஜேஷ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இதேபோன்று மத்திய பிரதேசத்தில் உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் நிருபராக பணிபுரிந்த 35 வயது நிறைந்த சந்தீப் சர்மா லஞ்சம் பெறும் போலீசார் மற்றும் மணல் கொள்ளைக்கு எதிராக ஸ்டிங் ஆபரேசன் நடத்தினார். இதுபற்றி கடந்த வருடம் 2 முறை செய்திகளை வெளியிட்டு உள்ளார்.
இதனை அடுத்து அவருக்கு மிரட்டல் விடப்பட்டது. உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என புகார் தெரிவித்த நிலையில் அவர் லாரி ஏற்றி கொல்லப்பட்டார்.

No comments