17 வரை வடகிழக்கில் அடை மழை!



வடக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை கனமழை தொடர வாய்ப்புள்ளதால், வெள்ள அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய சூழல் குறித்துத் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதியும், புவியியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடாக் கடற்பரப்பில் புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. குறித்த தாழமுக்கம் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையோரமாக நகரும் போது, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக வடக்கு, கிழக்கு, மாகாணங்களில் திரட்டிய மழைவீழ்ச்சியாக 250 மில்லி மீற்றர் வரை மழை பதிவாக வாய்ப்புள்ளது.

இத்தகையதொரு சூழலில், 14 ஆம் திகதி உருவாகவுள்ள தாழமுக்கத்தின் விளைவாக மேலும் மிகக் கனமழை பெய்யும் போது வடக்கு, மேற்கு, வடமேற்கு, மாகாணங்களின் பல பகுதிகளிலும் திடீர் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

வழமையாக வெள்ள நீர் தேங்கி நிற்கும் இடங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர் எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி வரை விசேட அவதானம் செலுத்த வேண்டும் .

நவம்பர் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதால், கடற்றொழிலாளர்கள் அக்காலப்பகுதியில் கடலுக்குச் செல்வதை முற்றாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


No comments