பல்பொருள் அங்காடியின் குளிர்சாதனப் பெட்டிகளை ஹேக் செய்ததற்கு ஈரான் எனக் குற்றம் சாட்டியது பிரான்ஸ்
பிரான்சில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மீது நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதல்களுக்கு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) பொறுப்பு எனப் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் இரவு நேரத்தில் நடத்தப்பட்ட இத்தாக்குதலால், பிரான்சில் உள்ள சுமார் 10,000 பல்பொருள் அங்காடிகளில் 700 அங்காடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகப் பல கோடி மதிப்பிலான உணவுப் பொருட்கள் மற்றும் விளைபொருட்கள் பாழாகியுள்ளன. மேலும், சில கடைகளில் குளிரூட்டும் சாதனங்கள் அதிக வெப்பமடைந்து தீப்பற்றிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இத்தாக்குதல் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரியதும், தீவிரமானதுமாக இருப்பதாகப் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், இத்தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் மீது ஐரோப்பிய நாடுகள் தடைகளை விதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், பிரான்சின் பல்பொருள் அங்காடிகள் மீது மீண்டும் இதேபோன்ற இணையவழித் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இரத்த வங்கிகளில் உள்ள குளிரூட்டும் சாதனங்களைக் குறிவைத்தும் இணையவழித் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவின் ஏனைய நாடுகளிலும் அமெரிக்காவிலும் இதுபோன்ற இணையப் பாதுகாப்பு மீறல்கள் பதிவாகியுள்ளன. இச்சம்பவங்கள் ஒன்றோடொன்று தொடர்புடையவையா என்பது குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Post a Comment