உக்ரைன், ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு யாரை அனுப்புவது: ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களிடையே வாக்குவாதம்
உக்ரைனில் நீடிக்கும் ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய நாடுகளும் பங்கேற்கவுள்ளதாக அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு ஐரோப்பியத் தலைவர்களுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
டப்ளினில் நடைபெற்ற ஐரோப்பிய அரசியல் சமூக உச்சிமாநாட்டின்போது, அமெரிக்காவிற்கு இரண்டு பிரதிநிதித்துவ இடங்கள் வழங்கப்படும் நிலையில், ஐரோப்பாவிற்கு ஏன் ஒரேயொரு இடம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ், நக்கலான புன்னகையுடன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
உக்ரைன் போர் தொடர்பான முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய நாடுகள் இதுவரை போதிய அளவில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்ற ஐரோப்பியத் தலைவர்களின் அதிருப்தியை அவரது எதிர்வினை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகரும் அவரது மருமகனுமான ஜாரெட் குஷ்னர் மற்றும் அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் அபுதாபியில் தூதரகப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன், பின்னர் மாஸ்கோவிற்குச் சென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் சந்தித்தனர்.
இதனைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர்கள் டப்ளினுக்குச் சென்றனர்.
ரஷ்யாவுடன் நடைபெறவுள்ள அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பியப் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியும் ஜாரெட் குஷ்னரும் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய முக்கியமான நபர்களில் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.
எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் யார் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பது என்பது தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தாங்களே நேரடியாகப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதால், ஒருமித்த முடிவை எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

Post a Comment