நபரொருவரை கடத்தி படுகொலை செய்தமை - ஈ.பி.டி.பி யை சேர்ந்த 08 பேருக்கு மரணதண்டனை
மட்டக்களப்பில் ஒருவரை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 08 பேரை குற்றவாளிகளாக கண்ட மட்டக்களப்பு மேல் நீதிமன்று கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி, ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவரை அப்போதைய செங்கலடி முகாமில் இருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை (EPDP) சேர்ந்தவர்கள் வானில் கடத்திச் சென்று கொலை செய்து புதைத்து, சடலம் புதைக்கப்பட்ட இடத்தின் மீது வாழை மரத்தை நாட்டி இருந்தனர்.
குறித்த கடத்தல் மற்றும் கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஏறாவூர் பொலிஸார் 9 பேரைக் கைது செய்து, விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற சுருக்கமுறையற்ற விசாரணைகளை தொடர்ந்து, சட்டமா அதிபர் திணைக்களத்தால் , 2016ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு பாரப்படுத்தப்பட்டது.
வழக்கில் முக்கிய சான்று பொருளாக கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் மீட்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் ரவி என அழைக்கப்படும் தர்மலிங்கம் இளமாரன், வீரக்குட்டி சேகர், விஜய் என அழைக்கப்படும் மகேந்திரராஜா வினோராஜ், ஜெக்கா என அழைக்கப்படும் யோகராசா ஜெயக்குமார், சிறி என அழைக்கப்படும் சிறிஸ்கந்தராஜா நாகநாதன், சிவா என அழைக்கப்படும் சொக்கலிங்கம் நாகராசா, அருள் என அழைக்கப்படும் அருணாச்சலம் ராமச்சந்திரன் மற்றும் விஜி என அழைக்கப்படும் கோவிந்தன் பிரதீபன் ஆகிய 8 பேர் குற்றவாளிகளாக மன்று கண்டது.
அதனை அடுத்து, பொது நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் சட்டவிரோதக் கூட்டத்தில் உறுப்பினராக இருந்து ஆட்கொலை செய்தமைக்காக மரண தண்டனையும், தேவதாஸ் சுரேஷ்குமாரின் மரணத்தை விளைவித்து ஆட்கொலை செய்தமைக்காகவும் மரண தண்டனையுமாக இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சட்டவிரோதக் கூட்டத்தில் உறுப்பினராக இருந்தமைக்காக 06 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை 9ஆவது பிரதிவாதியை வழக்கில் இருந்து மன்று விடுத்துள்ளது.

Post a Comment