ஒரு கோடியே 75 இலட்சம் வாக்காளர்கள்!
இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களுக்குமான வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அதனை வெளியிட்டுள்ளார்.
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உறுப்புரையின் விதானங்களுக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டிற்கான பிரதான தேர்தல் பதிவேடு மற்றும் துணைத் தேர்தல் பதிவேட்டின் அடிப்படையில், இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2026 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவேடுகளின்படி நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மொத்தமாக 17,534,397 (1 கோடியே 75 இலட்சத்து 34 ஆயிரத்து 397) வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களால் மொத்தம் 196 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
வாக்காளர்கள் மற்றும் ஆசனங்களின் பிரகாரம் கம்பஹா மாவட்டம் 19 ஆசனங்களை பெற்றுள்ளது.அதே போன்று கொழும்பு மாவட்டமும் 19 ஆசனங்களை பெற்றுள்ளது..
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மாவட்டங்களில் யாழ்ப்பாணம் 7 இலிருந்து குறைவடைந்து 6 ஆசனங்களை பெற்றுள்ளது.வன்னி 6 ஆசனங்களையும் மட்டக்களப்பு 5 ஆசனங்களையும் அம்பாறை 7 ஆசனங்களையும் பெற்றுள்ளது.
அதேவேளை திருகோணமலை 4 ஆசனங்களை பெற்றுள்ளது.

Post a Comment