காசாவில் இஸ்ரேல் புதிய தரைவழி இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது


காசா:
மத்திய காசா பகுதியில் ஹமாஸின் இராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்து தமது படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிகளில் வசிக்கும் பாலஸ்தீனப் பொதுமக்களும் சர்வதேச மனிதாபிமான உதவி அமைப்புகளும் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹமாஸ் அமைப்பின் போராளிகளை அப்பகுதியிலிருந்து வெளியேற்றும் நோக்கில் புதன்கிழமை காலை இந்த இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் எதிர்கொண்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக, காசாவின் மஞ்சள் கோட்டிற்கு மேற்கே துல்லியமான இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின்போது பீரங்கித் தாக்குதல்கள் தீவிரமடைந்ததுடன், துப்பாக்கிச் சூடுகளும் வான்வழித் தாக்குதல்களும் இடம்பெற்றதாக பிரான்ஸின் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள மஞ்சள் கோடு என்பது 2025 அக்டோபரில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஏற்பாட்டின் கீழ் உருவாக்கப்பட்ட பிரிப்புக் கோடாகும். இது இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளையும் ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளையும் பிரிக்கிறது.

இதற்கிடையில், பாலஸ்தீனப் பகுதிகளில் குடிமக்கள் விவகாரங்களைக் கையாளும் இஸ்ரேலிய இராணுவ அமைப்பான COGAT, அல்-புரைஜ் மற்றும் நுசெராத் அகதிகள் முகாம்களுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

மேலும், காசாவின் பிரதான போக்குவரத்துப் பாதையான சலா அல்-தின் சாலையையும் தவிர்க்குமாறு பாலஸ்தீனப் பொதுமக்களுக்கும் சர்வதேச உதவி அமைப்புகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த இராணுவ நடவடிக்கை இடம்பெறும் சூழலில், காசா மக்களின் மனிதாபிமான நிலைமை குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன. ஏற்கனவே உணவுப் பற்றாக்குறை, குடிநீர்த் தட்டுப்பாடு, மருத்துவ வசதிகளின் குறைபாடு மற்றும் பாதுகாப்பான தங்குமிடமின்மை போன்ற நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் பாலஸ்தீன மக்கள், புதிய இராணுவ நடவடிக்கைகளால் மேலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

No comments