குடைச்சல்கள் தாண்டி நினைவேந்தல்!



தமிழீழ மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்; தாயமெங்கும் உணர்வுபூர்வமாக தடைகளை தாண்டி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் நினைவேந்தல் வளைவு அமைப்பது தொடர்பாகப் இலங்கை காவல்துறைக்கும்; ஏற்பாட்டாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை, பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறன்று இரவு கிளிநொச்சி டிப்போ சந்திப் பகுதியில் நினைவேந்தல் வளைவு அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது சிவில் உடையில் அங்கு வந்த இலங்கை காவல்துறையினர் வளைவில் காட்சிப்படுத்தப்பட்ட பதாகையில் சட்டத்திற்கு முரணான படங்கள் இருப்பதாகத் தெரிவித்து அதனை அமைக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்தினர்.

இதனால் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், பணிகளில் ஈடுபட்டிருந்த எட்டு பேரையும் குறித்த நினைவேந்தல் வளைவையும் காவல்துறையினர் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

பின்னர், மறுநாள் எட்டு பேரும் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட தலையீடுகள் மற்றும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, காவல்துறைக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் இடையில் சுமுகமான இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று கைப்பற்றப்பட்ட நினைவேந்தல் வளைவு மீண்டும் ஏற்பாட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதேவேளை, துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட சின்னங்கள், உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, உயிரிழந்தவர்களை அமைதியாகவும் கண்ணியமாகவும் நினைவுகூருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதனிடையே முள்ளியவளை வடக்கு பொதுநோக்கு மண்டபத்தில் இன்று (25.11.2026) மாவீரர்கள் பெற்றோரை மதிப்பளிப்பு நிகழ்வை நடத்துவதற்கு முள்ளியவளை வடக்கு கிராம மக்களால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதன்போது அங்கு வருகை தந்த காவல்துறையினர் மண்டபத்தின் முன்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகையில் இடம்பெற்றிருந்த கார்த்திகை மலரை மறைக்குமாறும் அறிவுறுத்தி சென்றுள்ளனர்.


No comments