மாவீரர் நாள் நினைவு வளைவு: வலி. தெற்கு தவிசாளரிடம் பொலிஸார் விசாரணை!
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட "மாவீரர் நாள் நினைவு வளைவு" தொடர்பில் பிரதேச சபை தவிசாளரிடம் பொலிஸார் இன்றைய தினம் சனிக்கிழமை வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , மருதனார்மடம் பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபையின் தலைமை காரியாலயம் முன்பாக மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டு , வீதியில் சிவப்பு மஞ்சள் கொடிகளும் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டதுடன் , அப்பகுதியில் காங்கேசன்துறை வீதியின் குறுக்காக வளைவு பதாகை ஒன்றினையும் அமைந்திருந்தனர்.
அந்நிலையில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் பொலிஸார் பிரதேச சபை தவிசாளர் தி.பிரகாஷிடம் பிரதேச சபையில் வைத்து சுமார் 2 மணி நேர விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்
குறிப்பாக வீதியில் குறுக்காக அமைக்கப்பட்ட வளைவு பதாகை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , வீதியின் குறுக்கே பதாகை அமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் அனுமதி பெறப்பட்டதா என பொலிஸார் விசாரித்துள்ளனர்.
அதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தான் ஏதாவது கட்டுமானங்கள் உள்ளிட்ட எவற்றை செய்வதாயினும் பிரதேச சபையிடம் அனுமதி பெற வேண்டுமே தவிர , பிரதேச சபை அனுமதி பெற தேவையில்லை என தவிசாளர் பதில் அளித்துள்ளார்
யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி, சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரே தவிசாளரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

Post a Comment