கோத்தாவிற்கு ஞாபக மறதி!
கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியத்திற்கு, சிரேஷ்ட ஊடகவியலாளர் போத்தல ஜயந்த காட்டமான பதிலடியை வழங்கியுள்ளார்.
லலித் மற்றும் குகன் ஆகிய மனித உரிமை செயற்பாட்டாளர்களின் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் சாட்சியமளித்த கோட்டாபய ராஜபக்ச, ஊடகவியலாளர் போத்தல ஜயந்தவைத் தனக்குத் தெரியாது எனக் கூறியிருந்தார். எனினும், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பந்துல பத்மகுமாரவைத் தனக்குத் தெரியும் என அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் போத்தல ஜயந்த வெளியிட்டுள்ள நீண்ட சமூக வலைத்தளப் பதிவில் பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்:
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த காலத்தில், சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டமைக்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, தானும் சக ஊடகவியலாளர் சனத் பாலசூரியவும் பாதுகாப்பு அமைச்சிற்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக ஜயந்த குற்றம் சுமத்தியுள்ளார்.
போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்தால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என கோட்டாபய எச்சரித்ததாகவும், அந்தச் சந்திப்பின் போது அப்போதைய லேக் ஹவுஸ் தலைவர் பந்துல பத்மகுமார மற்றும் லக்ஷ்மன் ஹுலுகல்ல ஆகியோர் உடனிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த அச்சுறுத்தல் தொடர்பாக கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்ய முயன்ற போதிலும், அங்கிருந்த காவற்துறை அதிகாரிகள் அதனைப் பொறுப்பேற்க மறுத்துவிட்டதாக ஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் நடைபெற்று சில மாதங்களின் பின்னர், தான் வெள்ளை வானில் கடத்தப்பட்டு மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டதாகவும், இதனால் தனது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். இதன் காரணமாக 28 நாட்கள் வைத்தியசாலையிலும், ஆறு மாதங்கள் படுக்கையிலும் இருக்க நேரிட்டதுடன், இன்றளவும் பகுதியளவு அங்கவீனத்துடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“என்னைச் சித்திரவதை செய்தவர்கள் என்னை மறந்திருக்கலாம்; ஆனால் என்னைச் சித்திரவதை செய்தவர்களை நான் மறக்கவில்லை” என போத்தல ஜயந்த தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Post a Comment