செம்மணி புதைகுழி விவகாரம் - "என்னிடம் ஏராளமான தகவல்கள் உள்ளன, சாட்சியமளிக்கத் தயார்!"
செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான தகவல்கள் தன்னிடம் உள்ளதாகவும் , அது தொடர்பில் வழக்கு விசாரணைகளுக்கு தகவல் தெரிவிக்க தயாராக உள்ளேன் எனவும் , யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி முன்னாள் அதிபர் அல்போன்ஸ் இருதயநாயகம் பேர்னாட் அடிகளார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றுக்கு சத்திய கடதாசி மூலம் தெரிவித்துள்ளார்.
குறித்த சத்திய கடதாசியில்,
யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் அதிபராக கடந்த 1992 முதல் 2002 வரை பணியாற்றி வந்தேன். இந்தக் காலகட்டத்திலும், எனது குருத்துவப் பணியின் போதும், செம்மணி புதைகுழி தொடர்பில் ஏராளமான தகவல்களைப் பெற்றேன். அந்த சேகரித்து வைத்துள்ளேன்
குறிப்பிட்ட காலகட்டத்தில் யாழ்ப்பாண மறை மாவட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் பொதுக் குழுவான நீதி மற்றும் சமாதான ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றியதாலும், போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன் சார்ந்த பிரச்சினைகளிலும், மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் பிரச்சினைகளிலும் பங்கேற்றேன். அதனால் என்னால் ஏராளமான தகவல்களைப் பெற முடிந்தது.
மேலும், 1996 ஆம் ஆண்டிலும் அதற்குப் பின்னரும், யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மனிதக் குழி தொடர்பான அகழ்வாராய்ச்சிப் பணிகளில் நான் நேரடியாகப் பங்கேற்றேன்.
செம்மணிப் புதைகுழி குறித்த அடையாளத்தைக் காட்ட சோம ரத்ன ராஜபக்ஷ வந்தபோது, பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக நானும் அந்த இடத்தில் பிரசன்னம் ஆகியிருந்தேன்
செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் முக்கியத்துவமானது. எனவே, இந்த வழக்கு விசாரணைகளுக்கு என்னால் ஒத்துழைப்பு வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment