அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு சிங்கள பௌத்த வேட்பாளராக வளர்க்கப்படும் ஞானசார தேரர்? பனங்காட்டான்
சிறுவயதில் ஓர் முரடனாகவிருந்த ஞானசாரர் என்ற இளைஞன் எப்போது எங்கே துறவறம் பூண்டு எந்த விகாரையில் பௌத்த துறவியாக பணியாற்ற ஆரம்பித்தார் என்ற தகவல் எங்கும் காணப்படவில்லை. இளவயதில் வாகன சாரதி அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்தி ஒருவர்மீது மோதி தண்டிக்கப்பட்டவர் இவர். இனவாதம் மதவாதம் என்ற இரண்டுமே இவரது ஏவாயுதங்களாக இப்போது பயன்படுகின்றன.
இலங்கை அரசியலில் ஞானசார தேரர் கடந்த சில நாட்களாக பெரும் புள்ளியாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். இதன் நோக்கம், பின்னணி, நீண்ட காலத்திட்டம் என்பவை பற்றி பல்வேறு தகவல்கள் பரவலாக வெளிவருகின்றன.
நாட்டின் மூத்த அரசியல் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அனைவரும் கூட்டுச் சேர்ந்தாலும் எந்தத் தேர்தல்களிலும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இப்போது காணப்படவில்லை என்பது பொதுவான அபிப்பிராயம். நீதிமன்றப் படிகளை தரிசிப்பவர்களாகவும், குற்ற விசாரணைகளை தொடர்ந்து எதிர்பார்த்திருப்பவர்களாகவும் இவர்களில் பலரும் உள்ளனர்.
இதனால், இலங்கையில் இனி ஒரு கட்சி ஆட்சிதான் தொடரக்கூடும் என்ற சந்தேகத்தை இவர்களே பகிரங்கமாகத் தெரிவிக்கும் நிலைமைக்கு அரசியல் சுழிமாறிச் செல்கிறது. ராஜபக்சக்களின் இளவரசர் என்று அழைக்கப்பட்டுவந்த நாமல் பேபியின் எதிர்காலம் ஜே.வி.பி.யின் பெலவத்தையில் தங்கியுள்ளது.
கடந்த காலங்களில் தோலிருக்க சுளை பிடுங்கியவர்கள் என்ற அடையாளம் இடப்பட்டவர்கள் தாங்கள் கைது செய்யப்படலாமென்று எதிர்பார்ப்பதால் முற்கூட்டிய பிணைக்கு நீதிமன்றங்களை நாடும் நிலை அதிகரிக்கிறது. இன்னொரு தொகையினர் மருத்துவமனைகளை தங்கள் வாழ்விடங்களாக மாற்றி வருகின்றனர். இது தொடர்பாக முன்னாள் அரசியல்வாதியும் தற்பொழுது பத்திரிகையாளராகவும் கொழும்பில் பிரகாசிக்கும் ஒரு பிரபலத்துடன் சில நாட்களுக்கு முன்னர் உரையாடும்போது ஒரு விடயத்தை மிகவும் சீரியஸாக எடுத்துச் சொன்னார்.
ஞானசார தேரர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்தத்தின் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுவாரானால் ஆச்சரியப்பட நேராது என்பது அவர் கூற்று. அத்துடன், ஞானசார தேரர் யார் என்பதை அறிய வேண்டுமானால் விக்கிபீடியாவை பார்ப்பது அவசியம் என்றும் கூறினார். அவர் கூறியதை அறிய விக்கிப்பீடியாவை தேடியபோது பின்வரும் சில முக்கியமான தகவல்களை படிக்க நேர்ந்தது. அதில் சிலவற்றை மட்டும் கீழே தருகிறேன்:
“தென்னிலங்கையில் பல அரசியல் தலைவர்களை பிரசவித்தது காலி மாவட்டம். இங்குள்ள கலகொட அத்த என்ற கிராமம் ஞானசாரரின் பிறப்பிடம். பல பிள்ளைகளைக் கொண்ட சாதாரண குடும்பம் ஒன்றில் பிறந்தவர் இவர். தமது வாழ்க்கையை காலியிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தமக்குத் தாமே கடுமையான ஒழுக்க விதிகளை வகுத்து மடாலய வாழ்க்கையை மேற்கொண்டதாக இவர் அடிக்கடி கூறுவார். ஆனால் 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியான கார்டியன் பத்திரிகை இதற்கு மாறாக இவர் பற்றி குறிப்பிட்டுள்ளது. இளமைக் காலத்தில் ஒரு முரட்டுத்தனமானவராக இருந்ததாகவும், சிறை வாழ்க்கையிலிருந்து தப்புவதற்காக பௌத்த துறவிகளின் காவி உடையை அணிந்ததாகவும் தெரிவித்துள்ளது.
பௌத்த துறவிகளுக்கென உருவாக்கப்பட்ட ஜாதிய ஹெல உறுமயவில் 2000ம் ஆண்டில் இணைந்த இவர் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ராஜபக்ச குடும்பத்தோடு நெருக்கமாகி அரசியலில் ஒரு முக்கிய புள்ளியானார். 2012ல் சிங்கள பௌத்த தேசிய வடிவமான பொதுபல சேனவை ஆரம்பித்து அதன் செயலாளராகி தமது இனவாத ஆவேச உரைகளாலும் செயற்பாடுகளாலும் பிரபலமானார். .
இலங்கையில் சிங்கள பொலிஸ், சிங்கள ராணுவம் இருக்கிறது. இனிமேல் ஒரு முஸ்லிமோ, வேறொரு சிறுபான்மையினரோ சிங்களவரில் கை வைத்தால்… அது அவர்களின் இறுதியாக அமையும் என்று மாபெரும் பேரணியில் கர்ச்சித்து தம்மை சிங்கள பௌத்த காவலராக முதன்மைப்படுத்தினார்.
2014 யூன் மாதம் அளுத்கம என்ற முஸ்லிம் கிராமத்தில் ஒரு பௌத்த பிக்குவுக்கும் முஸ்லிம் இளைஞருக்கும் இடையில் தர்க்கம் இடம்பெற்றபோது – ‘போதும், இது போதும’; என்ற இவரது சுலோகம் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறி அவர்களின் வாழ்விடங்களை தீக்கிரையாக்கியது. அவ்வேளையில் இரண்டு இந்துக் கோவில்களும் தாக்குதலுக்குள்ளாகின.
இதற்கு முன்னராக, 2000ம் ஆண்டில் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது மதுபோதையில் வாகனம் ஒன்றை ஓட்டிச் சென்று ஏற்படுத்திய விபத்தில் பொலிசாரினால் கைதாகினார் (நீதிமன்ற வழக்கு இலக்கம் 6315-2000). நீதிமன்றத்தை அவமதித்த வழக்கொன்றில் 2018ம் ஆண்டு ஆறு வருட சிறைத்தண்டனை பெற்ற இவருக்கு, 2019 மே மாதம் 23ம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கினார்”.
ஆனால், 2026 செப்டம்பர் 10ம் திகதி மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்றம் பொதுமன்னிப்பை ரத்துச் செய்து, சிறைத்தண்டனையின் மிஞ்சிய காலத்தை அவர் சிறையில் கழிக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தலைமறைவான ஞானசார தேரரை அடர்ந்த காட்டுப் பகுதியில் வைத்து கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தது. மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இவரது காவியுடை நீக்கப்பட்டு சிறைச்சாலை உடை வழங்கப்பட்டதே இப்போது பெரிய விடயமாக பேசப்படுகிறது.
மகாசங்கத்தினர் ஜனாதிபதி அநுர குமரவை சந்தித்து ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்கவில்லை. தனிப்பட்ட ஒருவருக்கு சலுகை காட்டுவதற்காக சட்டத்தை மீற முடியாது என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடு. ஞானசார தேரர் என்பவருக்கு தனியாக விதிவிலக்கு அளிக்க முடியாது என்று கூறிய ஜனாதிபதி அநுர குமர, பொதுவாக பௌத்த துறவிகளின் காவியுடை தொடர்பாக சிறைச்சாலை சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரலாமென்றும் அதற்கு ஒரு குழுவை நியமித்து முடிவெடுக்கலாமென்றும் தெரிவித்த கருத்தை மகாசங்கத்தினர் ஏற்றுக்கொண்டு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.
ஆனால், பிரச்சனையாகியுள்ள இவ்விடயத்தை அரசியலாக்கி அதில் லாபம் தேட விரும்பிய பெயர் குறிப்பிட முடியாத பௌத்த துறவிகள் கண்டியிலிருந்து கொழும்பு ஜனாதிபதி அலுவலகம் நோக்கி பாதயாத்திரையை ஆரம்பித்தனர். நாடு தழுவிய சிங்கள பௌத்தர்களை எழுச்சியடையச் செய்து அநுர குமர அரசுக்கு எதிராக ஓர் அறகலையை உருவாக்குவது இதன் பின்னணியாக இருந்தது. எனினும், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகம் முன்னால் நடத்திய ஆர்ப்பாட்டத்தை பௌத்த துறவிகள் கைவிட நேர்ந்தது.
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை அநுர குமர முழுமையாக மறுத்துவிட்டார். ஆனால், பொதுவாக சிறைச்சாலை சட்டத்தில் பௌத்த துறவிகள் அணியும் காவி உடை தொடர்பாக மாற்றங்களை கொண்டுவர துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுமென்ற இவரது கூற்றை மகாசங்கத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்த துறவிகள் கேட்பது சட்டத்திருத்தம் அல்ல. ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமென்பதே இவர்களது கோரிக்கை.
அரசியல் என்பது தீர்வு காணமுடியாதவைகளை கேட்டுப் போராடுவது. ஞானசார தேரருக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என்பது போராட்டம் நடத்தும் பிக்குகளுக்கு நன்கு தெரியும். எக்காரணம் கொண்டாவது பொதுமன்னிப்பை ஜனாதிபதி வழங்கவாரானால் 2019ல் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன வழங்கி பொதுமன்னிப்பு தவறென்று உயர்நீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பை மீறிய குற்றச்சாட்டு அநுர குமர மீதும் பாயும்.
இந்தப் பின்னணியில் பார்க்கையில் அநுர குமர ஆட்சியில் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு கிடைக்குமென எதிர்பார்ப்பது மடைத்தனம். இது விடயத்தில் ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி நிலையான நிலைப்பாட்டில் இருப்பது தெரிகிறது.
இது ஒருபுறமிருக்க, பௌத்த துறவிகளின் காவியுடை தொடர்பாகத்தான் சிறைச்சாலைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறதா அல்லது அனைத்து மதத்தலைவர்கள் விடயத்திலும் பொதுவானதாக திருத்தம் மேற்கொள்ளப்படுகிறதா என்பது பற்றி இதுவரை தெளிவாகவில்லை. இது தொடர்பாக துரிதமாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய கடப்பாடு தமிழ் - முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைமைகளுக்கும் உண்டு.
ஊடகங்களிலும் பொதுவெளியிலும் இது தொடர்பாக தெரிவிக்கப்படும் விடயங்களைப் பார்க்கையில், பௌத்த துறவிகளின் காவியுடை சம்பந்தமாகவே சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படவிருப்பதாக அறியமுடிகிறது. இதுதான் நடைமுறையெனில், தேசிய மக்கள் சக்தி அரசும் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை வழங்கும் நிலையிலிருப்பதை மற்றைய இன-மத மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
எதுவுமே தெரியாதவர்கள் அல்லது புரியாதவர்கள்போல தமிழ் - முஸ்லிம் அரசியல் தலைமைகள் பாசாங்கு பண்ணிக் கொண்டிருப்பார்களேயானால், சட்டம் ஓர் இருட்டறையாகவே தொடரும். இது ஞானசார தேரர் மட்டுமன்றி இவர் போன்ற மதவாதிகள் நாட்டின் ஜனாதிபதியாகுவதற்கு இலகுவாக வழி வகுத்துவிடலாம்.

Post a Comment