அக்குரணையில் சீமெந்து லொறி மோதி கோர விபத்து: பிரேக் செயலிழந்ததே காரணம் எனச் சாரதி வாக்குமூலம்!


கண்டி - மாத்தளை A-9 வீதியில், அக்குரணை 7 ஆம் கட்டை குருகொட சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்திற்கு வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையே காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அலவத்துகொட பகுதியிலிருந்து கண்டி திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சீமெந்து தூள் ஏற்றிய வாகனம் (Bulker), சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பல வாகனங்களுடன் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து சம்பவித்தது.

இந்த விபத்தில் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவரும், அக்குறணை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண், மாத்தளை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய யுவதி மற்றும் அக்குறணை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஆகிய நால்வரே உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 6 பேர் கண்டி மற்றும் அக்குறணை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைகள் கண்டி வைத்தியசாலையில் நடத்தப்பட்டு, உடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விபத்துடன் தொடர்புடைய கல்கமுவை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சீமெந்து வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (20) கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 தமது வாகனம் பிரேக் செயலிழந்து கட்டுப்பாட்டை இழந்தமையினால் இந்த விபத்து நேர்ந்ததாக, கைதான சாரதி தெரிவித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாதீர தெரிவித்துள்ளார்.

முதலில் குறித்த வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றையே மோதியுள்ளதுடன், குறித்த மோட்டார் சைக்கிள் சுமார் 160 மீற்றர் தூரம் இழத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலும் 4 முச்சக்கரவண்டிகள், 2  டிப்பர்கள் உட்பட மொத்தமாக எட்டு வாகனத்துடன் இந்த சீமெந்து ஏற்றிய வாகனம் மோதியுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

No comments