பிரான்சில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு: ஐவர் காயம்!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் தென்மேற்குப் புறநகர்ப் பகுதிகளான டிராப்ஸ் மற்றும் லா வெரியரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 12 வயது சிறுமி உட்பட மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை இனவெறி பயங்கரவாதத் தாக்குதல் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தங்களின் தோல் நிறம் அல்லது மதத்தின் காரணமாகக் குறிவைக்கப்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரிஸுக்கு மேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள டிராப்ஸ் நகரில் தொடங்கிய இந்தத் தாக்குதல், அருகிலுள்ள லா வெரியர் நகருக்கும் பரவியுள்ளது. தாக்குதல் நடத்தியவர் தனது காரில் இருந்தபடி சுமார் 15 நிமிடங்கள் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெட்ரோல் நிலையம், மருத்துவ மையம் மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் குறிவைக்கப்பட்டதாக டிராப்ஸ் நகர மேயர் அலி ரபே தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தியவர் சாம்பல் நிற ரெனால்ட் கிளியோ காரில் பல குடியிருப்புப் பகுதிகள் வழியாகச் சென்றதாகவும் சாட்சிகள் கூறியுள்ளனர்.
முடிந்தவரை அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று மேயர் தெரிவித்துள்ளார். இதனால், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
சந்தேக நபர் கைது
தாக்குதலைத் தொடர்ந்து, லா வெரியர் நகரில் உள்ள பிரதான N10 சாலைக்கு அருகில் சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு ஊடகங்கள் சந்தேக நபரை 39 வயதான கெவின் டி. என அடையாளப்படுத்தியுள்ளன. அவருக்கு எதிராக ஏற்கெனவே நான்கு குற்றப்பதிவுகள் இருந்ததாகவும், அவை பின்னர் நீக்கப்பட்டிருந்ததாகவும் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சந்தேக நபர் காவல்துறையினருக்கு அறிமுகமானவர் என்றாலும், நாட்டின் உளவுத்துறை கண்காணிப்பில் இருந்தவர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேக நபரின் நெருங்கிய குடும்ப வட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பயங்கரவாத நோக்கம் குறித்து விசாரணை
இந்தத் தாக்குதலின் துல்லியமான நோக்கம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், இது பயங்கரவாதச் செயல் தொடர்பான கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது.
தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட்ட அதிபர் மக்ரோன், இனவெறி மற்றும் மத அடிப்படையிலான வெறுப்புக்கு எதிராக பிரெஞ்சு மக்கள் உறுதியாக நிற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் பிரான்சின் சமூக ஒற்றுமைக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது. தாக்குதலின் பின்னணி, குறிவைக்கப்பட்டவர்களுக்கும் சந்தேக நபருக்கும் இடையிலான தொடர்பு மற்றும் தாக்குதலுக்கான உண்மையான நோக்கம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



Post a Comment