இத்தாலியில் கலவரங்கள்: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பிரதமர் மெலோனி ஆலோசனை
இத்தாலியின் பல நகரங்களில் வார இறுதியில் ஏற்பட்ட கலவரங்களைத் தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆலோசித்து வருகிறார்.
அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகப் பிரதமர் மெலோனி அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். செவ்வாய்க்கிழமை அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்படலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மிலன், துரின், போலோக்னா உள்ளிட்ட நகரங்களில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கண்டித்து பல நாட்களாக அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டங்கள் பின்னர் வன்முறையாக மாறின. இதன்போது கடைகள் சேதப்படுத்தப்பட்டதுடன், கொள்ளைச் சம்பவங்களும் இடம்பெற்றன. இந்நிலையில், கலவரங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக இத்தாலியின் ANSA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிலன் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பேராலயச் சதுக்கத்தில், கருப்பு உடையணிந்து முகமூடி அணிந்திருந்த இளைஞர்கள் கடைகளின் கண்ணாடிகளை உடைத்ததுடன், பல்பொருள் அங்காடிகளையும் கொள்ளையடித்தனர். இச்சம்பவங்களில் குறைந்தது 14 பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவங்களை மிலன் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அரிதான வன்முறைச் சம்பவங்களாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கலவரங்கள் தொடர்பாக மொத்தம் 270-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், பிரான்சில் முன்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தற்போதைய நிலைமையை இத்தாலிய ஊடகங்கள் ஒப்பிட்டுள்ளன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மிலனில் உள்ள பல ஆடம்பரப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் திங்களன்று மூடப்பட்டிருந்தன.
தீவிர வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட பிரதமர் ஜார்ஜியா மெலோனி, வலதுசாரி மற்றும் பழமைவாதக் கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமை தாங்கி கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதும் மக்களின் அதிருப்திக்குத் தீர்வு காண்பதும் அவரது அரசாங்கத்திற்கு முக்கிய சவால்களாக உருவெடுத்துள்ளன.

Post a Comment