அமெரிக்கத் தேர்தலில் வாக்களித்த முதல் போப்பாண்டவர் என்ற பெருமையைப் பெற்றார் போப் லியோ XIV


அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு தபால் வாக்குச்சீட்டு மூலம் தனது வாக்கைப் பதிவு செய்துள்ள போப் லியோ XIV, அமெரிக்கப் பொதுத் தேர்தலில் வாக்களித்த முதல் போப்பாண்டவர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலம், சிகாகோவில் ராபர்ட் பிரான்சிஸ் பிரெவோஸ்ட் என்ற பெயரில் பிறந்த 71 வயதுடைய போப் லியோ XIV, கடந்த அக்டோபர் 3ஆம் திகதி தபால் வாக்குக்கு விண்ணப்பித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை உறுதிப்படுத்திய வத்திக்கான் பத்திரிகை அலுவலகம், திருத்தந்தை அமெரிக்கக் குடிமகன் என்ற அடிப்படையில் தனது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த காலங்களில் அவர் தேர்தல்களில் பங்கேற்று வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இல்லினாய்ஸ் மாநிலத் தேர்தல் வாரியத்தின் பதிவுகளின்படி, ராபர்ட் பிரெவோஸ்ட் 2000ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஐந்து முதன்மைத் தேர்தல்கள் உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் வாக்களித்துள்ளார். 2020 மற்றும் 2022ஆம் ஆண்டுகளைத் தவிர ஏனைய பொதுத் தேர்தல்களிலும் அவர் வாக்களித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெருவில் ஆயராகப் பணியாற்றிய காலத்தில் அந்நாட்டின் குடியுரிமையையும் பெற்றிருந்த போப் லியோ, அங்கு வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த சந்தர்ப்பங்களிலும் தனது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தியுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

ஜனநாயகச் செயல்முறைகளில் பங்கேற்பது ஒவ்வொரு குடிமகனினதும் உரிமை மட்டுமல்ல, கடமையும் ஆகும் என்ற நம்பிக்கையைத் திருத்தந்தை கொண்டுள்ளதாக வத்திக்கான் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

வத்திக்கான் நகரம் முழுமையான முடியாட்சி முறையைக் கொண்டிருப்பதால் அங்கு அரசியல் தேர்தல்கள் நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் பிரதிநிதிகள் சபையின் அனைத்து உறுப்பினர் பதவிகளுக்கும், செனட் சபையின் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியினர் இரு அவைகளிலும் தமது பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து வருகின்றனர்.

இல்லினாய்ஸ் மாநிலத்தில் ஆளுநர் ஜே.பி. பிரிட்ஸ்கரின் எதிர்கால அரசியல் நிலை தொடர்பான தேர்தலும், ஓய்வுபெற்ற செனட்டர் டிக் டர்பினின் இடத்திற்கான போட்டியும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

போப் லியோ XIV யாருக்கு வாக்களித்தார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்துடன் பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ஈரான் போர், குடியேற்றக் கொள்கை மற்றும் ஊடகச் சுதந்திரம் உள்ளிட்ட விடயங்களில் டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையை அவர் விமர்சித்துள்ளார். அதேவேளை, போர் எதிர்ப்பு, அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான உரையாடல் ஆகியவற்றின் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.

டிரம்ப் போப்பாண்டவரைக் குறித்து விமர்சனக் கருத்துகளை வெளியிட்டுள்ள நிலையில், போப் லியோவும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தைக் குறித்துப் பேசுவதற்கோ அல்லது திருச்சபையின் நற்செய்திச் செய்தியை வெளிப்படுத்துவதற்கோ தாம் அஞ்சப்போவதில்லை என ஏப்ரல் மாதம் அல்ஜீரியாவுக்குச் சென்றிருந்தபோது அவர் தெரிவித்திருந்தார்.

போர் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது என்றும், அமைதியை நிலைநாட்ட நாடுகளுக்கிடையில் உரையாடலும் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் போப் லியோ XIV வலியுறுத்தியுள்ளார்.

No comments