துணை விமானியால் விமான அறையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஃப்ளைதுபாய் விமானி விளக்கினார்


துணை விமானியால் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த நிலையிலும், விமானத்துக்குள் இருந்த மற்றவர்களை காப்பாற்றும் நோக்கில் கதவைத் திறந்த ஃப்ளைதுபாய் விமானத்தின் இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார், தனது உயிரைப் பற்றி போராடிய அதே நேரத்தில் சக பயணிகளின் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.

துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட ஃப்ளைதுபாய் FZ1073 விமானத்தில் 170-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சுமார் இரண்டரை மணி நேரத்தில், 17,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்தபோது திடீரென செங்குத்தாகக் கீழிறங்கத் தொடங்கியது.

விமானத்தில் ஏற்பட்ட அவசரநிலையைத் தொடர்ந்து முதலில் அவசரச் சமிக்ஞை அனுப்பப்பட்டது. பின்னர், விமானக் கடத்தலைக் குறிக்கும் 7500 குறியீடு பயன்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், ஒரு விமானி மற்றொரு விமானியை கத்தியால் தாக்கியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். விமானம் ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த கேப்டன் மச்சார், காயமடைந்த நிலையிலும் விமானத்தின் கதவைத் திறக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான காணொளி உரையாடலில் மச்சார் கூறுகையில், தான் காயத்துடன் தரையில் கிடந்தபோதும், விமானத்தின் கதவை உள்ளிருந்து திறப்பதற்காக இறுதியாக தன்னால் முடிந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்ததாகத் தெரிவித்தார்.

நான் காயத்துடன் தரையில் கிடந்தேன். ஆனாலும் உள்ளிருந்து கதவைத் திறக்க ஒரு கடைசி உந்துதலைக் கொடுக்க வேண்டும் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

மேலும், தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடியபோதிலும், மற்றவர்கள் உயிரிழப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதில் தான் உறுதியாக இருந்ததாக அவர் கூறினார்.

காயமடைந்த விமானியை சக பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் கவனித்துக் கொண்டிருந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர் கட்டுப்படுத்தப்பட்டார். பின்னர் விமானத்தில் இருந்த இரண்டு மாற்று விமானிகள் விமானத்தை சவூதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள தபூக் விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 6.58 மணிக்கு பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.

கேப்டன் மச்சார் முதலில் தபூக்கில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் விமானம் மூலம் அபுதாபிக்கு மாற்றப்பட்ட அவர், தற்போது சீரான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது பயங்கரவாதச் செயல்பாடு அல்லது அதற்கான நோக்கத்துடன் தொடர்புடையதா என்பதும் விசாரணையின் ஒரு பகுதியாக இருப்பதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர் ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் தீவிரவாத சித்தாந்தத்தின் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். எனினும், இந்தக் கூற்றுகள் தொடர்பான இறுதி முடிவு விசாரணைகளின் அடிப்படையிலேயே அமையும்.

விமானி மச்சாரின் அடையாளம் வெளியானதைத் தொடர்ந்து இந்தியாவில் சமூக ஊடகங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. 17 ஆண்டுகளாக விமானியாகப் பணியாற்றி வருவதாகக் கூறிய அவர், விமானத்தின் செயல்பாடுகளை நீண்ட அனுபவத்தின் மூலம் நன்கு அறிந்திருப்பதாகவும் மோடியிடம் தெரிவித்தார்.

அவரது தைரியம், பொறுமை மற்றும் அவசரநிலையில் விரைவாக முடிவெடுத்த திறன் பலரது உயிரைக் காப்பாற்ற உதவியதாக பிரதமர் மோடி பாராட்டினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகமும் கேப்டன் மச்சார் நன்றாகக் குணமடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

தனது காயம் குறித்து பேசிய மச்சார், அதை ஒரு தடையாகப் பார்க்கவில்லை என்றும், குணமடைவதை ஒரு படிப்படியான பயணமாகக் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு நேரம் எடுக்கும். ஆனால் நான் நிச்சயம் குணமடைவேன்; மீண்டும் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று அவர் கூறினார். 

No comments