மன்னார் பஜார் பகுதியில் ஒரே இரவில் 4 வர்த்தக நிலையங்களில் கொள்ளை !
மன்னார் பஜார் பகுதியில் அமைந்துள்ள நான்கு வர்த்தக நிலையங்களில் இன்று (01) அதிகாலை திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நகைக்கடைகள் மற்றும் இரண்டு ஆடை விற்பனை நிலையங்களிலேயே இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வர்த்தக நிலையங்களின் மேற்பகுதியில் கூரையை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், அங்கிருந்த பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை வர்த்தக நிலையங்களைத் திறக்கச் சென்ற உரிமையாளர்கள், தமது கடைகளின் கூரை உடைக்கப்பட்டு திருடர்கள் உள்ளே நுழைந்திருப்பதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட நகைக்கடை மற்றும் ஆடை விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.




Post a Comment