முல்லைத்தீவில் காட்டு யானைகள் அட்டகாசம்!
முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலைமைகளை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அப்பகுதி மக்கள் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ஞானதாஸ் ஜூட்சன் ஆகியோரது முறைப்பாட்டிற்கு அமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த பகுதிக்கு நேற்று புதன்கிழமை (30) நேரில் சென்று காட்டுயானைகள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்களைப் பார்வையிட்டார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அப்பகுதி மக்களின் முறையீட்டிற்கு அமைவாக ஏற்கனவே கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பிலக்குடியிருப்பில் மக்கள் காட்டுயானைகளால் பாதிப்புக்குள்ளாகின்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்தோடு பிலக்குடியிருப்பு கிராமத்திற்கு யானைவேலி அமைக்குமாறு குறித்த கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரால் வலியுறுத்தப்பட்டுமிருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது வலியுறுத்தலையடுத்து 2027ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் பிலக்குடியிருப்பு கிராமத்திற்கு யானைவேலி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அதன் பின்னரும் பிலக்குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசங்கள் தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அண்மையில் பிலக்குடியிருப்பு பகுதியில் காட்டுயானையால் வீடொன்று உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் பயிர்நிலங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நிலமைகளை நேரில் பார்வையிட்டுநாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பிலக்குடியிருப்பு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையைத் தீர்க்க தம்மால் கவனஞ் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.



Post a Comment