ஞானாவிற்கு வீடு:வங்கி முகாமையாளர் உள்ளே!
நீதிமன்றங்களால் கைது பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்வதிலிருந்து தப்பிக்க உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வங்கி அதிகாரி ஒருவர் கைதாகியுள்ளார்.கைதான அதிகாரி எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
களனிய பகுதியைச் சேர்ந்த வங்கி அதிகாரி, கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஞானசார தேரருக்கு எதிராக மூன்று நீதிமன்றங்களால் கைது பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததை அறிந்திருந்த போதிலும், சந்தேகநபர் தனது வாகனத்தில் ராஜகிரியவில் இருந்து எல்பிட்டிய பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றதாக கொழும்பு குற்றப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க உதவியமை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்கத் தவறியமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையில், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு குற்றப் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரினர்.
இதனை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான், சந்தேகநபரை ஒக்டோபர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடடுள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் கைதாக ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment