எங்கள் கடல் வாடகைக்கு இல்லை!



வடக்கு கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து பெருங்கடலை நிறுவனங்களுக்கு விற்கும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள புதிய கடற்றொழில் சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (21) கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் மீனவ அமைப்புக்கள் குதித்துள்ளன.

மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அத்தகைய பிரச்சார நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

கடற்றொழிலுக்குத் தேவையான வலை மற்றும் உபகரணங்களுக்கு வரிக்கு மேல் வரிகள் விதிக்கப்பட்டு அவற்றின் விலைகள் தாங்க முடியாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு புதிய படகை வாங்குவது பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  கடலுக்குச் செல்வதற்கு எரிபொருள் மானியம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், நடைமுறையில் சந்தை விலையிலேயே மீனவர்கள் எரிபொருளைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது.

இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்தியப் படகுகள் கடல் வளங்களைக் கொள்ளையடித்துச் செல்கின்றன. ஆட்சியாளர்கள் அதற்கு முறையான தீர்வினைப் பெற்றுக்கொடுக்காமல் மௌனம் காக்கின்றனர்.

கடற்றொழில் துறையை அறிவியல் பூர்வமான திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய அரசாங்கத்திற்கும் எவ்வித நோக்கமும் விருப்பமும் இல்லை. 

கடலையும் கடல்வளத்தையும் சூறையாடும் இந்திய ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்திடவேண்டும்.பெருங்கடலைப் பிரித்துக் கம்பனிகளுக்கு விற்கும் முன்மொழியப்பட்ட கடற்றொழில் சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெய கோரி இலங்கை முழுவதும் போராட்;டங்களை முன்னெடுக்கவுள்ளதாக போராட்டக்குழுக்கள் அறிவித்துள்ளன.


No comments