அமைதிப்படை படுகொலைகள் : மறக்கவியலாத துன்பியல்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையினுள் இந்திய அமைதிப்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மருத்துவர்கள், தாதியர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளர்கள் உள்ளிட்ட 68 பேரின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை (21) யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை நிர்வாகத்தினர், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பங்களிப்புடன் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
படுகொலை செய்யப்பட்ட வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்களின் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடரேற்றிப் பொதுமக்களாலும் வைத்தியசாலை ஊழியர்களாலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.கடமையின் போதும் சிகிச்சையின் போதும் உயிர்களை இழந்த தியாகிகளுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய அமைதிப்படையினர் கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.
இக் கொடூரத் தாக்குதலில், மருத்துவமனையில் அன்றைய தினம் கடமையில் இருந்த மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 மருத்துவ சேவையாளர்களும், விடுதிகளில் சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்களுமாக மொத்தம் 68 பேர் வைத்தியசாலை வளாகத்திற்குள்ளேயே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment