கிட்டு பூங்கா : மடை மாற்றம்!



விடுதலைப்போராட்டத்தின் எச்சங்களாக உள்ள சான்றுகளை மடைமாற்றம் செய்வதில் அனுர அரசு வடகிழக்கின் தமிழர் தாயகத்தில் முன்னின்று செயற்பட்டுவருகின்றது.அவ்வகையில் யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கிட்டு ஞாபகார்த்த பூங்கா அமைக்கப்பட்டிருந்த பகுதியை சங்கிலியன் தோப்பென 65 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் "மரபுரிமைக்கு உயிரூட்டுவோம்" எனும் ஆயிரம் வேலைத்திட்டங்களின் கீழ் ஒரு பகுதியாக புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் தொடக்க நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் வி.மதிவதனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக சங்கிலியன் தோப்பு அடையாளப்படுத்தி இந்திய தூதரகம் நகர்வுகளை முன்னெடுத்துள்ளது.

கிட்டு உள்ளிட்ட போராளிகள் நினைவாக விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட பூங்காப்பகுதியையே தற்போது மடைமாற்ற முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. 

இதனிடையே யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் விகாரைக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுத்தமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 07ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தையிட்டியில் உள்ள தனியார் காணியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தினார்கள் எனக் குற்றம்சாட்டி வேலன் சுவாமிகள், வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலருக்கு எதிராகப் பலாலி காவற்துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர், வழக்கின் அடுத்த கட்ட விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 07ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துக் கட்டளையிட்டார்.


No comments