கோத்தா : கடைசி கதவும் மூடியது!





கைதிலிருந்து தப்பிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தம்மை கைது செய்வதையோ அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதையோ தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரியே கோத்தபாயவினால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனு தொடர்பான விடயங்களை விரிவாக ஆராய்ந்ததன் பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால் நிராகரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், விசாரணைகள் தொடர்பில் தமக்கு எதிராக கைது நடவடிக்கைகளோ அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் உத்தரவுகளோ பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சத்தில் கோத்தபாயவினால் பாதுகாப்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments