அரச வேலை, வீடு, கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி: நுவரெலியாவில் 5 பேர் கைது


நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் போலி கடிதத் தலைப்புகள் மற்றும் உத்தியோகப்பூர்வ முத்திரைகளைப் பயன்படுத்தி, அரசாங்க வேலை, வீடுகள் மற்றும் கடன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாகக் கூறப்படும் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நுவரெலியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 70 வயது நபர் ஒருவரும், நுவரெலியா, ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் தகவல் தொடர்பு மையங்களை நடத்தி வரும் சிலரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தங்களை நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் பதில் கணக்காளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கூன் உள்ளிட்ட அதிகாரிகளின் கையொப்பங்களைப் போலியாகப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போலி ஆவணங்கள் மூலம் பணம் வசூல்

அரசாங்க வேலைகள், வீடுகள் மற்றும் கடன்கள் பெற்றுத் தரப்படும் எனக் கூறி சில பொதுமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பணம் செலுத்திய பின்னர், சிலருக்கு மாவட்டச் செயலகத்தின் உத்தியோகப்பூர்வ கடிதங்களைப் போன்ற போலி ஆவணங்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த ஆவணங்களில் போலியான முத்திரைகள் மற்றும் அதிகாரிகளின் போலியான கையொப்பங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அந்த ஆவணங்கள் தொடர்பாக மாவட்டச் செயலகத்திலிருந்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் சந்தேகம் அடைந்த சிலர், மாவட்டச் செயலாளருக்கு நேரடியாக கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டபோது அவை மாவட்டச் செயலகத்தால் வழங்கப்பட்டவை அல்ல என்பதும், அதில் பயன்படுத்தப்பட்டிருந்த கடிதத் தலைப்புகள், முத்திரைகள் மற்றும் கையொப்பங்கள் போலியானவை என்பதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

மாவட்டச் செயலாளர் முறைப்பாடு

இந்த மோசடி தொடர்பான தகவல் கிடைத்ததும், மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கூன் நுவரெலியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் உள்ள மேலும் சிலரின் உதவியுடன் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணம் பெற்றதற்கான ஆதாரமாக, மாவட்டச் செயலகத்தின் உத்தியோகப்பூர்வ கடிதத் தலைப்புகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலி கடிதங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

போலி முத்திரைகள் மற்றும் கணினிகள் மீட்பு

சந்தேக நபர்களிடம் இருந்து பல போலி உத்தியோகப்பூர்வ முத்திரைகள், மாவட்டச் செயலகத்தின் கடிதத் தலைப்புகள் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கணினிகள் உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், மாவட்டச் செயலாளர் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் ஆகியோரின் பெயர்களைப் பயன்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சிகளில் மாவட்டச் செயலாளர் கலந்து கொள்வார் என ஏற்பாட்டாளர்களிடம் கூறி, அதனை நம்ப வைத்து பொதுமக்களிடமிருந்தும் பணம் வசூலிக்கப்பட்டதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பின்னர், மாவட்டச் செயலாளரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என தொலைபேசி மூலம் ஏற்பாட்டாளர்களிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் வராவிட்டாலும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துமாறு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.

பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பு அதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு, மோசடியில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, பொதுமக்களிடம் இருந்து எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments