திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலை: யாழ்.பல்கலை முன் உணவுதவிர்ப்பு போராட்டம்: ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு பொலிஸார் தடை


ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாள்கள் அஹிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (25) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக முன்றலில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தியாக தீபத்தின் நினைவைப் போற்றும் வகையில் இடம்பெறவுள்ள இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் பல்கலை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை அவ்விடத்திற்கு முச்சக்கர வண்டியில் வருகை தந்த பொலிஸார் மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு சென்றுள்ளனர்.

மேலும், இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

நினைவேந்தல் நிகழ்வின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு கோப்பாய் பொலிஸார் தடை விதித்தனர். ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் உரிய அனுமதி பெறுமாறு பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மாணவர்கள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அனுமதி கோரிய போதிலும், பொலிஸார் அனுமதி வழங்க மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments