ரஷ்யாவில் Tu-95 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து: 6 பேர் உயிரிழப்பு; ஒருவர் காயம்


ரஷ்யாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அமூர் பிராந்தியத்தில் Tu-95 ரக மூலோபாய குண்டுவீச்சு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஆறு பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்த நிலையில் உயிர் தப்பியதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 29ஆம் திகதி, அமூர் பிராந்தியத்தில் மக்கள் வசிக்காத பகுதியில் பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானதாக அரசு செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் முதற்கட்ட தகவலின்படி, விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான விமானம் எந்தவிதமான வெடிமருந்துகளையும் ஏற்றிச் செல்லவில்லை என்றும் TASS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணங்களையும் சூழ்நிலைகளையும் கண்டறியும் நோக்கில், ரஷ்ய விமானப்படை விசாரணைக் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளது. விபத்துக்கான காரணம் தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரணையின் முடிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments