மலேசியாவில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நஜிப்பிற்கு வீட்டுக் காவலில் இருக்க அனுமதி


1MDB ஊழல் வழக்கில் மில்லியன் கணக்கில் கையாடல் செய்ததற்காக தண்டிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பலமுறை கருணை கோரியிருந்தார். தற்போது மலேசிய மன்னர் அவருக்கு நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு வழங்கியுள்ளார்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அரச கருணை வழங்கப்பட்டு, அவருக்கு விதிக்கப்பட்ட ஆறாண்டு சிறைத் தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கப்படுவார் என்று பிரதமர் அன்வர் இப்ராஹிமின் சட்டத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

மன்னர் சுல்தான் இப்ராஹிம், நஜிப்பிற்கு நிபந்தனைக்குட்பட்ட பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் என்றும், அதன் மூலம் அவர் தனது தண்டனையின் மீதமுள்ள காலத்தை 2028 ஆகஸ்ட் 23 வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

நிபந்தனைக்குட்பட்ட இந்த மன்னிப்பானது, 50 மில்லியன் மலேசிய ரிங்கிட் (12.3 மில்லியன் டாலர்; 10.7 மில்லியன் யூரோ) செலுத்துவதைப் பொறுத்தது.

73 வயதான நஜிப், 2009 முதல் 2018 வரை பிரதமராகப் பணியாற்றியபோது இணைந்து நிறுவிய 1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் என்ற அரசு முதலீட்டு நிதியத்தின் பெயரால் அழைக்கப்படும் 1MDB ஊழல் வழக்கில் தனது பங்கிற்காக தற்போது ஆறு வருட சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

2020-ல், நஜிப் தனது வங்கிக் கணக்குகளுக்கு 10.3 மில்லியன் டாலரை முறைகேடாகப் பரிமாற்றம் செய்ததன் மூலம் அதிகார துஷ்பிரயோகம், குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் பணமோசடி செய்த குற்றங்களுக்காக முதலில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அவர் 2022-ல் தனது தண்டனையைத் தொடங்கினார் .

மற்றொரு வழக்கில், 1MDB வங்கியிலிருந்து கிட்டத்தட்ட 569 மில்லியன் டாலர்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நஜிப், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி குற்றங்களுக்காக டிசம்பர் 2025-ல் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார் . அவருக்கு 2.8 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டு, மேலும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது இந்தத் தண்டனை, அவரது தற்போதைய தண்டனைக் காலம் முடிந்த பிறகு அமலுக்கு வரும். அவர் தற்போது அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து வருகிறார்.

நஜிப் பொதுமன்னிப்பு பெறுவது இது முதல் முறையல்ல. 2024-ல் முந்தைய மன்னரின் ஆட்சிக்காலத்தில், நஜிப்பின் முதல் குற்றத்தீர்ப்பில் விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டு , அபராதங்களும் குறைக்கப்பட்டன. அந்தச் சமயத்தில், அவர் வீட்டுக் காவலில் வைக்கக் கோரிய முயற்சி தோல்வியடைந்தது .

வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்ட முடிவு குறித்து நஜிப்பின் சட்டக் குழு இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை, மேலும் முன்னாள் தலைவர் எப்போது வீட்டுக் காவலில் விடுவிக்கப்படுவார் என்பதும் உடனடியாகத் தெரியவில்லை.

1MDB ஊழலில், நஜிப்பின் உயர் அதிகாரிகள் மற்றும் கூட்டாளிகளால் குறைந்தபட்சம் 4.5 பில்லியன் டாலர் அரசு நிதி திருடப்பட்டு, பணமோசடி செய்யப்பட்டதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நஜிப் எப்போதும் தவறு செய்ததை மறுத்து வருவதுடன், தன்னை ஒரு பலிகடாவாகக் காட்டிக்கொள்ளவும் முயன்று வருகிறார்.

இந்த நிதி முறைகேடு ஊழல் மலேசியாவில் நாடு தழுவிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், 1957-ல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து நாட்டை ஆண்டு வந்த நஜிப்பின் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு (UNMO) கட்சியின் 2018 தேர்தல் தோல்விக்கும் வழிவகுத்தது.

ஒரு முக்கிய அரசியல் குடும்பத்தின் வாரிசான நஜிப், நீண்ட காலமாக யாராலும் தொட முடியாதவராகக் கருதப்பட்டார். அவர் மலேசியாவில் இன்னமும் அரசியல் செல்வாக்குடன் இருக்கிறார் மேலும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட அரச மன்னிப்பானது, சட்டத்தின் கீழ் சமமான உரிமைகள் வழங்கப்படுவது குறித்த கேள்விகளுக்கு வழிவகுக்கக்கூடும்.

No comments