தேர்தலில் குடியரசுக் கட்சி இரு அவைகளையும் கைப்பற்றினால் அமெரிக்கர்களுக்கு 5,000 டாலர்: டிரம்ப் வாக்குறுதி

அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரு அவைகளிலும் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டால், ஒவ்வொரு வயது வந்த அமெரிக்க குடிமகனுக்கும் 5,000 டாலர் பங்குத்தொகை வழங்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டெக்சாஸ் மாநிலம் டல்லாஸில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் இடைக்காலத் தேர்தல் மாநாட்டில் நேற்றுப் புதன்கிழமை  டிரம்ப் உரையாற்றினார். 

அமெரிக்காவின் பொருளாதார வலிமை மற்றும் வெற்றியின் பலனை மக்களுடன் பகிர்ந்து கொள்வதாகக் கூறினார்.

இந்தத் தொகை அமெரிக்காவிற்குள்ளேயே செலவிடப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தப் பணத்தை கனடா, சீனா அல்லது ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் செலவிடுவதை விரும்பவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

எனினும், 5,000 டாலர் பங்குத்தொகை திட்டத்திற்கு தேவையான நிதி எவ்வாறு திரட்டப்படும் என்பது குறித்து அவர் விரிவான விளக்கம் அளிக்கவில்லை. அதேபோல், மக்கள் அந்தத் தொகையை அமெரிக்காவுக்குள்ளேயே செலவிடுகிறார்களா என்பதை அரசு எவ்வாறு கண்காணிக்கும் என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை.

முன்னதாக சுங்க வரி மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு 2,000 டாலர் காசோலைகள் வழங்கப்படும் என டிரம்ப் உறுதியளித்திருந்தார். ஆனால் அந்தத் திட்டம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.

இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டிய டிரம்ப், நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் தனது பெயரும் வாக்குச்சீட்டில் இடம்பெற்றுள்ளதாக வாக்காளர்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முக்கிய கொள்கைகளான குடியேற்றக் கட்டுப்பாடுகள், ஈரான் மீதான போர், சுங்க வரிகள் மற்றும் அவற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார தாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர் உரையாற்றினார்.

மெக்சிகோ வளைகுடா மற்றும் ஒன்ராறியோ ஏரிக்கு அமெரிக்காவின் பெயரைச் சூட்ட அவர் மேற்கொண்ட முயற்சிகள் பெரும் கைதட்டலைப் பெற்றன. பின்னர், ஹார்முஸ் ஜலசந்திக்கு "டிரம்ப் ஜலசந்தி" எனப் பெயர் மாற்றுவது குறித்து அவர் நகைச்சுவையாகப் பேசினார்.

மாநாட்டில் உரையாற்றிய பல குடியரசுக் கட்சி தலைவர்கள் ஜனநாயகக் கட்சியினரை கடுமையாக விமர்சித்தனர். அவர்களில் டெக்சாஸ் தலைமை வழக்கறிஞர் கென் பாக்ஸ்டனும் இடம்பெற்றார். அவர் ஜனநாயகக் கட்சியின் வளர்ந்து வரும் அரசியல் சவாலாளரான ஜேம்ஸ் தலாரிகோவுக்கு எதிரான கடுமையான செனட் போட்டியில் ஈடுபட்டுள்ளார்.

பென்சில்வேனியா குடியரசுக் கட்சி செனட்டர் டேவ் மெக்கார்மிக்கிற்கு எதிர்பாராத வகையில் ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜான் ஃபெட்டர்மேன் அறிமுக உரை வழங்கினார். சமீப ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சியின் சில நிலைப்பாடுகளிலிருந்து விலகியுள்ள ஃபெட்டர்மேன், மெக்கார்மிக்கை தனது நெருங்கிய நண்பர் எனக் குறிப்பிட்டதுடன், பென்சில்வேனியாவின் இரும்புத் தொழிலைப் பாதுகாப்பதில் டிரம்புடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

மாநாட்டில் ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க கேபிட்டலில் நடைபெற்ற கலவரத்தில் பங்கேற்றதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஓத் கீப்பர்ஸ் அமைப்பின் நிறுவனர் ஸ்டீவர்ட் ரோட்ஸும் இடம்பெற்றிருந்ததாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. பின்னர் டிரம்ப் வழங்கிய பொது மன்னிப்பின் மூலம் ரோட்ஸ் விடுதலை பெற்றிருந்தார்.

மேலும், கொல்லப்பட்ட தனது கணவர் சார்லி கிர்க்கின் முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கு முன்னதாக மாநாட்டில் பங்கேற்ற எரிக்கா கிர்க்கையும் டிரம்ப் பாராட்டினார்.

உரையின் நிறைவில் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸுக்கும் டிரம்ப் சுருக்கமாக பாராட்டு தெரிவித்தார்.

No comments