பிரான்சில் தொடருந்து தடம் புரண்டு விபத்து: 44 பேர் காயம்


பிரான்சின் வடமேற்கு பகுதியில் உள்ள நோர்மண்டி பிராந்தியத்தில் தொடருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் குறைந்தது 44 பேர் காயமடைந்துள்ளனர்.

ரூவன் மற்றும் கேன் நகரங்களுக்கு இடையேயான தொடருந்து வழித்தடத்தில், வெள்ளிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி சுமார் 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக செய்ன்-மாரிடைம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிளியோன் மற்றும் டூர்வில்-லா-ரிவியர் நகராட்சிகளுக்கு அருகே இடம்பெற்ற இந்த விபத்தில், சுமார் 180 பயணிகளுடன் சென்ற எ தடம் புரண்டதாக பிரான்சின் தேசிய தொடருந்து நிறுவனமான எஸ்.என்.சி.எஃப் மற்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளன.

காயமடைந்தவர்களில் இளம் பெண் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவர் உலங்குவானூர்தி மூலம் ரூவன் நகருக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் சுமார் 140 தீயணைப்பு வீரர்கள் மீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சர் டபரோட் தெரிவித்தார்.

தொடருந்து அடையாளம் தெரியாத பொருள் ஒன்றின் மீது மோதியதன் பின்னர் தடம் புரண்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனினும், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்.என்.சி.எஃப் தெரிவித்துள்ளது.

விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் தொடருந்துப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பயணிகளைப் பராமரிப்பதும், அதன் பின்னர் பாதுகாப்பான இயக்க நிலைமைகளை மீட்டெடுப்பதும்தான் முன்னுரிமை என எஸ்.என்.சி.எஃப் ரெசோ தெரிவித்துள்ளது. 

No comments