மக்காவை ஹூதிகள் தாக்க முயற்றதாக சவூதி அரேபியா குற்றச்சாட்டு: ஹூதிகள் மறுப்பு
ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் புனித நகரமான மக்காவை நோக்கி ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக சவூதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஹூதிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணி வெளியிட்ட அறிக்கையில், ஹூதி போராளிகளால் ஏவப்பட்ட ஒரு ட்ரோன், மக்காவின் வான்வெளிக்குள் நுழைவதற்கு முன்பாக சவூதி வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு புனித மசூதிகள் மற்றும் யாத்ரீகர்களின் பாதுகாப்பு சிவப்புக் கோடு எனக் குறிப்பிட்ட கூட்டணி, இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
எனினும், சவூதி அரேபியாவின் குற்றச்சாட்டை ஹூதி இயக்கத்தின் உயர்மட்ட உறுப்பினர் ஹசிம் அல்-அசாத் நிராகரித்துள்ளார். மக்காவைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட “பழைய பொய்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
57 முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), புனிதத் தலங்களை குறிவைக்கும் எந்தவொரு தாக்குதலையும் கடுமையாகக் கண்டித்துள்ளது. புனிதத் தலங்களின் புனிதத்தன்மையை மீறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அவற்றின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், யேமனில் ஹூதிகளுக்கும் சவூதி ஆதரவு அரசுப் படைகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. திங்கள்கிழமை இரவு சவூதி அரேபியா மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஹூதி தாக்குதலில் 13 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதல் ஏற்பட்ட மோதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 100 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் முக்கிய கடல்வழியான பாப் அல்-மண்டப் பகுதியில் சவூதி எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கும் ஹூதிகளால் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகரித்து வரும் பதற்றத்தின் பின்னணியில், சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எகிப்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஹோர்முஸ் மற்றும் பாப் அல்-மண்டப் வழியாக கடல்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உறுதி செய்ய இரு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில், சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு அந்நாட்டிற்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கக் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment