தாய்லாந்து மற்றும் மியான்மாரில் கனமழை: இரு தரப்பிலும் 16 பேர் உயிரிழப்பு!


தாய்லாந்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, தலைநகர் பாங்காக்கை மட்டுமின்றி பல மாகாணங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அண்டை நாடான மியான்மரிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பல உயிர்களை காவு கொண்டுள்ளது.

தாய்லாந்தில்  8 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தில் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் பெய்து வரும் கனமழையால் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மூன்று கிழக்கு மாகாணங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. பாங்காக்கில் இதுவரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தின் 27 மாகாணங்களில் 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளும், சுமார் 17 லட்சம் மக்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் பாங்காக்கில் தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டதுடன், மக்கள் முடிந்தவரை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதன் காரணமாக நகரின் சாலைகளிலும் பொதுப் போக்குவரத்திலும் வழக்கத்தைவிட குறைவான மக்கள் காணப்பட்டனர்.

வெள்ளம் காரணமாக 80,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

பாங்காக்கின் பாங் காபி பகுதியில் வசித்த 32 வயதான நட்டபோன் மான்கியன், மின்சாரம் மற்றும் குழாய் நீர் வசதி இல்லாததால் தனது காதலியுடனும் இரண்டு பூனைகளுடனும் அங்கிருந்து வெளியேறியதாகத் தெரிவித்தார். தொலைபேசி பேட்டரிகளும் தீர்ந்துவிட்டதால் நிலைமை மிகவும் கடினமாக இருந்ததாக அவர் கூறினார்.

சுமார் 48 மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழைக்குப் பின்னர், சனிக்கிழமை பாங்காக்கில் நகரம் தழுவிய பேரிடர் அறிவிக்கப்பட்டது. சில பகுதிகளில் திங்கள்கிழமையும் தொடை உயரம் வரை வெள்ளநீர் தேங்கியிருந்தது.

வெள்ளநீர் முழுமையாக வடிய ஒரு வாரம் வரை ஆகலாம் என்று பாங்காக் ஆளுநர் தெரிவித்துள்ளார். நீரேற்று நிலையங்கள் தொடர்ந்து முழுத் திறனில் இயங்கி வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மியான்மரிலும் 8 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தைத் தாக்கிய கனமழை அண்டை நாடான மியான்மரையும் பாதித்துள்ளது. அந்நாட்டின் தெற்கு தனிந்தாரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

லாங்லான் பகுதியில் எட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 20 முதல் 30 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் உள்ளூர் தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 18 கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மியான்மரில் தொடரும் உள்நாட்டுப் போர் காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேலும் சிரமமடைந்துள்ளதாக உள்ளூர் குழுக்கள் தெரிவித்துள்ளன.

காலநிலை மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் அதிதீவிர வானிலை நிகழ்வுகளின் தீவிரமும் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

No comments