உத்தரப் பிரதேசத்தில் கனமழை: வெள்ளத்தில் 81 பேர் உயிரிழப்பு!
இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் பல்வேறு சேதங்களில் குறைந்தது 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 62 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் செப்டம்பர் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் 56 பேர் உயிரிழந்த நிலையில், செப்டம்பர் 27ஆம் திகதி மேலும் 25 பேர் உயிரிழந்ததாக உத்தரப் பிரதேச நிவாரண ஆணையர் ஹிருஷிகேஷ் பாஸ்கர் யசோத் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அகில இந்திய வானொலி தெரிவித்துள்ளது.
இதனிடையே, உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்று பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக அம்ரோஹா, ஸ்ரவஸ்தி, பிலிபிட், பிஜ்னோர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Post a Comment