பொலிஸாருக்கு சொல்லி சிலையை அகற்றுமளவுக்கு நாம் அவ்வளவு சக்தி வாய்ந்தவர்களா ? - சி.வீ.கே கேள்வி
என்னுடையதோ, கட்சியின் கோரிக்கையின் பெயரிலோ, அல்லது தூண்டுதலின் பெயரிலோ சிலை அகற்றப்பட்டது என்பது ஒரு அபாண்டமான, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என தமிழரசு கட்சியின் தலைவரும் வடமாகாண சபையின் அவைத்தலைவருமான சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தில் காணப்பட்ட தியாக தீபத்தின் சிலை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டது.
குறித்த சிலையை அகற்றவதற்கு , தமிழரசு கட்சியும் அதன் தலைமையும் ஒரு காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார்.
அது தொடர்பில் தமிழரசு கட்சியினர் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பினை யாழ்ப்பாணத்தில் நடாத்திய போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நானும் தமிழ் அரசு கட்சியும் சிலை வைப்பிற்கு எதிரானவர்களாகவும், பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் துணை போனதாகவும், எங்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் தான் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாக அபாண்டமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது,
அவ்வாறாக நாங்கள் சிலை வைத்தமைக்கு எதிரானவர்கள் என்ற ஒரு கருத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்வைத்த விடயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
என்னுடைய கோரிக்கையின் பெயரிலோ, அல்லது தூண்டுதலின் பெயரிலோ சிலை அகற்றப்பட்டது என்பது ஒரு அபாண்டமான, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு.
நினைவேந்தல் விடயங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், தாங்கள் தான் எல்லாம் செய்யலாம், தங்களுக்கு தான் நினைவேந்தல்கள் குத்தகை தரப்பட்டது போன்று , தாங்கள் தான் எல்லாம் என தாமாகவே பிரகடனப்படுத்தி, நினைவேந்தல் குழுக்கள் என உருவாக்கி நினைவேந்தல்களை செய்கிறார்கள்
தமிழ் தேசிய கட்சி என்று கூறக்கூடிய தமிழரசு கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எஃப், , டெலோ போன்ற கட்சிகள் இல்லாமல். தனியே தமது கட்சி ஏகபோகம் என , ஏனையவர்களை களங்கப்படுத்தி, செயல்படுவது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தியாகி திலீபனின் அஞ்சலியை வைத்து நாங்கள் யாரும் அரசியல் செய்கிறது நாகரிகமான விஷயம் அல்ல என்பதும், அப்படி நடக்கிறது என்ற கவலையையும் நான் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
இதற்கு மேல ஒன்றும் நான் சொல்ல விரும்பவில்லை. நானோ அல்லது எங்கள் கட்சியோ பொலிஸாருக்கு சொல்லி தான் இந்த சிலையை அகற்றினார்கள் என்று சொல்கிறார்கள். அவ்வளவு சக்தி வாய்ந்தவர்களா நாம் ?
எனவே மக்கள் இவர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்
Post a Comment