கவனயீர்ப்பு - சந்திப்புக்கள்: சிவராசா அனோஜன்!
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை உடனடியாக இரத்து செய்து, அவரை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று மாலை(21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, அனோஜனின் விடுதலைக்காகத் தொடர்ச்சியாகத் தங்களது கவனயீர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இதனிடையே சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின்; பெற்றோரை, இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சந்தித்தார்.
சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் இயன்றளவு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காகச் சட்டரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தலையீடு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சவூதி அரசரிடம் இது தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குமாறு இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூலக் கோரிக்கையை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் குறிப்பிடடுள்ளார்.
அதேவேளை சிவராசா அனோஜனின் விடுதலைக்காக மேற்கொள்ளக் கூடிய உச்சபட்ச தலையீடுகளைச் செய்வேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சிவராசா அனோஜனின் பெற்றோரைச் சந்தித்த வேளையிலேயே அவர் அதனை தெரிவித்தார்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்காக, இலங்கையிலுள்ள சவூதி அரேபியத் தூதுவர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளேன். அவரது விடுதலைக்காகச் செய்யக் கூடிய அதிகபட்ச தலையீடுகளைக் கட்சி, இனம், மதம், சாதி பேதமின்றிச் செய்வேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Post a Comment