வெடுக்கு நாறிமலை:தடையில்லை!

 


எதிர்வரும் சனிக்கிழமை வெடுக்குநாறிமலையில் சைவமக்கள் ஏற்பாடு செய்துள்ள வழமையான பூஜைவழிபாடுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி வவுனியா நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் கோரிய விண்ணப்பம் நீதவானால் நிராகரிக்கப்பட்டது. 

நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் எதிர்வரும் சனிக்கிழமை வடக்குமாகாண தலைமை சங்க தேரர் சந்தபோதி தலைமையில் சம்புத்த பூஜை என்ற பெயரில் பௌத்த நிகழ்வு ஒன்று ஏற்பாடாகியுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி சைவமக்களும் வழமையான விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர். இந்த நிலையில் குறித்த தினத்தில் அந்தபகுதியில் இருதரப்பும் ஒரே நேரத்தில் வழிபாட்டிற்கு செல்வதால் சமாதான குலைவு ஏற்ப்படும் என்று நெடுங்கேணி பொலிசார் வவுனியா நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.இதனையடுத்து ஆலயத்தின் நிர்வாகத்தினரும் பௌத்த தேரர் தரப்பும் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில் தொல்பொருள் பகுதிகளுக்கு சேதத்தை விளைவிக்காமல் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளாமல் பூஜை வழிபாட்டை மேற்கொள்ளுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் இருதரப்பிற்கும் கட்டளையிட்டுள்ளது.

இதேவேளை சைவ மக்களின் பூஜைகளை அன்றையதினம் மேற்கொள்வதால் சமாதான குலைவு ஏற்ப்படலாம் எனவே அன்றையதினம் அதற்கு தடைவிதிக்குமாறு நெடுங்கேணி பொலிசார் மற்றும் தேரரின் தரப்பினால் மன்றில் இறுக்கமான கோரிக்கை விடுக்கப்பட்டது. 

அதற்கு ஆலயநிர்வாகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

எனினும் வெடுக்குநாறிமலையில் வழிபடும் சுதந்திரத்திற்கு தடை ஏற்ப்படுத்த முடியாது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய வவுனியா நீதவான் நீதிமன்றம் அவர்களது கோரிக்கையினை கருத்தில் எடுக்கவில்லை.

இந்நிலையில் அன்றைய தினம் சைவமக்களும் வழமையான பூஜை வழிபாடுகளில் ஈடுபட மன்று அனுமதி வழங்கியது. 


முன்னைய செய்தி

வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் நடைபெறவுள்ள நிலையில் ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக காவல்துறையினர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

நைனாமடு காட்டு பகுதியில் அமைந்துள்ள புராதன பெறுமதி வாய்ந்த எச்சங்கள் கொண்ட பூமி பிரதேசத்தினுள் இந்து சமய வழிபாட்டாளர்கள் மூலமாகவும் மற்றும் பௌத்த மத வழிபாட்டாளர்கள் மூலமாகவும் சமய வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதாக மற்றும் பூஜை நடவடிக்கைகள் மேற்கொள்ள  தயார் செய்துள்ளனர்.

இந்து மத வழிபாட்டாளர்கள் மற்றும் பௌத்த மத வழிபாட்டாளர்கள் ஒரே திகதியில் ஒரேநேரத்தில் ஒரே பூமியில் தொல் பொருள் அமைந்துள்ள இடத்தில் சமய வழிபாடுகள் மேற்கொள்ள இருப்பதாகவும் அக்காரணத்தினை அடிப்படையாக கொண்டு இரு தரப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் வன்முறைகள் மற்றும் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அத்துடன் இருவர்களின் சமய வழிபாடுகளுக்கும் இடையூறு ஏற்படவும் பிரதேசத்தில் சமாதான சீர்குலைவு ஏற்படவும் இவ்வாறாக இடப்பிரச்சனைகள் தொடர்ந்தும் ஏற்படுவதாலும் இத் தளத்தினை பிரதான மையமாக கொண்டு நாட்டிற்குள் இன மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளமையினால் மற்றும் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாகவும்  காவல் நிலைய பொறுப்பதிகாரியினால்  நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் சனிக்கிழமை வடக்கு மாகாண தலைமை பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது


No comments