சர்வதேச அழகிப் போட்டியில் தமிழ் பெண்ணின் பெருமைக்குரிய சாதனை!
வியட்நாமில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச உலக அழகிப் போட்டியில் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா உலக அழகு ராணி பட்டத்தை வென்றார்.
எனினும், இந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த மலேசியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தனுசியா செட்டி உலகத் தமிழர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார்.
உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், தனது அறிவாற்றல், தன்னம்பிக்கை மற்றும் கம்பீரமான ஆளுமை மூலம் தனுசியா சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
ஆசிரியராகவும் சமூகச் செயற்பாட்டாளராகவும் செயல்பட்டு வரும் தனுசியா, இளைஞர்களின் கல்வி, தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத் திறன் வளர்ச்சி தொடர்பில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக, பெண்கள் தங்களது திறமைகளைத் தயக்கமின்றி வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் பல்வேறு நிகழ்வுகளில் வலியுறுத்தி வருகிறார்.
அவரது சமூக அக்கறையும் தெளிவான சிந்தனையும், அவரை வெறுமனே ஒரு அழகிப் போட்டி போட்டியாளராக அல்லாமல், சமூகப் பொறுப்புள்ள தனித்துவமான ஆளுமையாக அடையாளப்படுத்தியுள்ளது.
மேலும், போட்டியின் போது ஆங்கிலம், மலாய், மாண்டரின் மற்றும் தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் சரளமாகப் பேசியமை அவரது தனித்துவத்தை மேலும் வெளிப்படுத்தியது.
“மாற்றம் என்பது நமக்குள் இருந்தே தொடங்க வேண்டும்” என்ற கருத்தை நான்கு மொழிகளிலும் பகிர்ந்த அவர் வெளியிட்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
சர்வதேச அழகிப் போட்டி மேடையில் தமிழ் மொழி ஒலித்த இந்தத் தருணம், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன்னம்பிக்கை, சமூக அக்கறை மற்றும் தமிழ் கலாசார அடையாளத்தை ஒருங்கிணைத்து சர்வதேச அரங்கில் தனுசியா செட்டி வெளிப்படுத்திய விதம், இளம் தலைமுறையினருக்கும் குறிப்பாக இளம் பெண்களுக்கும் உத்வேகமளிக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

Post a Comment