கனடா–உக்ரைன் 100 ஆண்டு கூட்டாண்மை: வான் பாதுகாப்புக்கு 350 மில்லியன் டாலர் உதவி
கனடாவும் உக்ரைனும் தங்களது 100 ஆண்டுகால கூட்டாண்மையை தொடர்ந்து வலுப்படுத்த உறுதியளிக்கும் முக்கிய பிரகடனத்தில் வியாழக்கிழமை கையெழுத்திட்டன.
உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, கனடா பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்ட அந்நாட்டு உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சந்திப்பின்போது, உக்ரைனின் வான் பாதுகாப்பை வலுப்படுத்த கனடா கூடுதல் உதவிகளை வழங்கும் என பிரதமர் மார்க் கார்னி உறுதியளித்தார்.
அமெரிக்காவின் ஜம்ப்ஸ்டார்ட் வழிமுறையின் மூலம் முக்கியமான வான் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கனடாவும் உக்ரைனும் இன்று இறுதி செய்துள்ளன என கார்னி தெரிவித்தார்.
இந்த வான் பாதுகாப்புத் தொகுப்பின் மதிப்பு சுமார் 350 மில்லியன் கனேடிய டாலர்கள் என அவர் கூறினார். இது சுமார் 260 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமானதாகும்.
மேலும், உக்ரைனுக்கு இதுவரை கனடா வழங்கிய ஆதரவின் மொத்த மதிப்பு சுமார் 26 பில்லியன் கனேடிய டாலர்கள் எனவும் கார்னி தெரிவித்தார். எரிசக்தி கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு கனடா தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் அவர் கூறினார்.
வான் பாதுகாப்புக்கான புதிய உதவிக்கு நன்றி தெரிவித்த அதிபர் ஜெலென்ஸ்கி, இந்தத் தொகுப்பு உக்ரைனுக்கு மிகவும் முக்கியமானது என்றும், தற்போதைய சூழலில் அது இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே, கனடாவின் மேற்கு மாகாணங்களின் வளர்ச்சியில் உக்ரைனியர்களின் வரலாற்றுப் பங்களிப்பையும் பிரதமர் கார்னி சுட்டிக்காட்டினார்.
உக்ரைனியர்கள் இந்த மாகாணத்தையும், இந்த நாட்டையும் கட்டமைக்க உதவுகிறார்கள். அமைதி திரும்பும்போது, உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்ப கனடா உதவும் என ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சுட்டிக்காட்டி அவர் தெரிவித்தார்.
கனடாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனிய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தற்போதைய பிரகடனமும் புதிய பாதுகாப்பு உதவிகளும் அமைந்துள்ளன.

Post a Comment