யாழ்ப்பாணம் இணுவிலில் மதுபான சாலையை அகற்ற கோரி போராட்டம்
யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, இன்று (20) வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலைக்கு முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்” என்ற பிரதான கோஷம் முன்வைக்கப்பட்டது.
போராட்டத்தில் கிராம மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, மதுபானசாலை தமது கிராமச் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக, கிராமத்தில் மதுபானப் பாவனை அதிகரிப்பதைத் தடுப்பதுடன், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் குறித்த மதுபானசாலையை அப்பகுதியிலிருந்து அகற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வலியுறுத்தினர்.
மேலும், பொதுமக்களின் நலன் மற்றும் கிராமத்தின் சமூகச் சூழலை கருத்தில் கொண்டு, மதுபானசாலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் மதுபான சாலையை அகற்றுமாறு , யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான சு.கபிலனிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.


Post a Comment