உள்ளகத்தில் உத்தரவாதமில்லை! அயலகத்தில் நம்பகத்தன்மையில்லை! சங்கரா! யார் கொலோ சதுரர்! பனங்காட்டான்


'தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை, சங்கரா! யார் கொலோ சதுரர்!" என்று மாணிக்கவாசக சுவாமிகள் இறைவனிடம் கூறியதாக கதையுண்டு. 'நான் என்னை உன்னிடம் தந்தேன், நீ என்னிடம் உன்னைத் தந்தாய், இந்தக் கொடுக்கல் வாங்கலில் யாருக்கு லாபம்" என்பது இதன் பொருள்.

தென்னிலங்கை அரசியலில் இப்போது உக்கிர தாண்டவம் இடம்பெறுகிறது. இலங்கையை முன்னர் ஆட்சி புரிந்த சகல அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் வஞ்சகம் இல்லாமல் ஏதோ ஒரு நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். 

சிலர் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதும், சிலர் பிணையில் வெளிவர அனுமதிக்கப்படுவதும், சிலருக்கு பயணத்தடை விதிக்கப்படுவதுமாக சட்டத்தின் சகல அலகுகளும் செயற்படுகின்றன. அடுத்ததாக கைதாகப்படுபவர் யாராக இருக்கலாமென்ற அச்சமும் அங்கலாய்ப்பும் ஏற்றத்தாழ்வின்றி சகலரையும் வாட்டிக் கொண்டிருக்கிறது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராகவிருந்தவரும் சட்டத்தரணியும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவாசத்தின் கைது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகவிருந்தபோது அவரின் ஆலோசகர்களில் ஒருவராக அகிலவிராஜ் கடமையாற்றிய வேளையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக இவர் கைதானதால், இதன் தொடர்ச்சியாக ரணிலும் விசாரணைக்குட்படுத்தப்படும் சாத்தியம் இருப்பதாக பெரும்புள்ளிகள் கருதுகின்றனர். 

அண்மையில் முதன்முதலாக சஜித் பிரேமதாசவின் அலுவலகம் சென்ற ரணில் அங்கு நாமல் ராஜபக்ச உட்பட பல கட்சிக்காரர்களையும் சந்தித்து நடத்திய கூட்டத்தின் தொடராக அகிலவிராஜ் மீதான நடவடிக்கை இடம்பெற்றிருக்கலாமெனவும் கருத்து நிலவுகிறது. சகல எதிரணிகளையும் இணைத்து அதற்கு ரணில் தலைமை தாங்கவிருப்பதாகவும், விரைவில் இவர்கள் மகாநாயக்கர்களை சந்தித்து அநுர அரசின் செயற்பாடுகள் பற்றி எடுத்துக்கூறவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்த காலத்தில் அகிலவிராஜ் கைது இடம்பெற்றிருக்கிறது. 

அரசியலில் கிழட்டு நரியென வர்ணிக்கப்படும் ஜே.ஆரின் அரசியல்வாரிசான ரணில்,  குள்ளநரியென சமகாலத்தில் அடையாளம் காணப்படுபவர். இவரது ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து  தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்தபோதிலும் அதன் தலைமைப் பதவியை விட்டு விலகாதவர் இவர் என்பதைப் புரிந்து கொண்டால் இவரது வழித்தடம் எதனை நோக்கியது என்பதை விரிவுபடுத்தத் தேவையில்iலை. 

தெற்கிலுள்ள சிறைச்சாலைகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள், தாக்குதல்கள், கொலைகள் பற்றிய உண்மையான தகவல்கள் இன்னமும் முழுமையாக வெளிவரவில்லையென எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. சிறைச்சாலைகளில் பல அடுக்குப் பாதுகாப்புகள் ஏற்பாடாகியிருப்பினும் தாக்குதல்கள் இடம்மாறி இடம் தொடர்கிறது. அநுர அரசை ஆட்டங்காணச் செய்வதற்கே இந்த அசம்பாவிதங்கள் இடம்பெறுவதாகச் சொன்னாலும் அதனை ஏற்றுக்கொள்ள ஆட்சிபீடம் மறுத்து வருகிறது. சிறைச்சாலைக் கலவரங்கள் அநுர அரசின் நிர்வாகத் தோல்வியென்று தேர்தலில் தோற்றுப்போன மகிந்தவின் பொதுஜன பெரமுன அறிக்கைகள் வாயிலாக தெரிவித்து வருகிறது. 

1971 சேகுவேரா புரட்சியின்போதும், 1987-89 கால இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்போதும் முறையே சிறிமாவோ பண்டாரநாயக்கவினாலும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினாலும் அழிக்கமுடியாதுபோன ஜே.வி.பியின் நிகழ்கால வடிவமான தேசிய மக்கள் சக்தி, சிறைச்சாலை சம்பவங்களால் கலக்கமடையாது என்ற பாணியில் அநுர குமர தலைமையிலான ஆட்சி தனது செயற்பாட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

1983 தமிழின அழிப்பின் பின்னணியில் செயற்பட்டவைகள் என்று கூறி ஜே.வி.பி., நவசமாஜ கட்சி, கம்யுனிஸ்ட் கட்சி ஆகிய மூன்றையும் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். தடை செய்ததுடன் அவற்றின் சில தலைவர்களையும் தடுப்புக் காவலில் வைத்தார். சிறைச்சாலை அனர்த்தங்களை காரணம் காட்டி அநுர குமர அரசு அதே நடைமுறையை பின்பற்றி சில அரசியற் கட்சிகளுக்கும் அதன் முக்கிய பிரதானிகளுக்கும் தடை விதிக்கலாமென்ற அச்சமும் தெற்கில் பரவலாக காணப்படுகிறது. 

சிங்களதேச அரசியல் குடும்பங்கள் என்று அழைக்கப்படுபவர்களில் பலர் - இளையோர் மூத்தோர் என்று வித்தியாசமின்றி அரசின் சட்ட நடவடிக்கைகளுக்குள் தள்ளப்படலாமென்ற எதிர்பார்ப்பும் சில பிரதான அணிகளிடம் காணப்படுகிறது. முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச (இவர் மகிந்த ராஜபக்சக்களின் குடும்பத்தைச் சார்ந்தவர் அல்ல) அண்மையில் தமது மகன் கைதான பின்னர் எவ்வாறு அமைதிப்படுத்தப்பட்டுள்ளார் - அதாவது, அவரது குரல் எவ்வாறு முடக்கப்பட்டதென்பதை சிலர் இவ்விடயத்தில் முன்னுதாரணம் காட்டி வருகின்றனர். .

அநுர அரசுக்கு எதிராக தெற்கின் அரசியல் அணிகள் ஒன்றாகி செயற்படும் நிலைமை ஏற்படக்கூடுமானால், அண்மையில் உருவாக்கப்பட்ட ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் கூட்டு என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பது பற்றியும் உயர்மட்டத்தில் ஆராயப்படுகிறது. இப்போதைக்கு இவ்விடயத்தில் அலட்டிக்கொள்ள விரும்பாத ஆறு தமிழ்க் கட்சிகளின் கூட்டு தனது செயற்திட்டத்தை அங்குமிங்கும் அலைபாய விடாது தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

ஆறு கட்சிகளின் பிரதிநிதிகளையும் மிகக்குறுகிய கால அவகாசத்தில் ஜனாதிபதி அநுர குமர திஸ்ஸநாயக்க சந்தித்து உரையாடினார். ஏற்கனவே தமிழரசு கட்சியினருடன் தனியாக நடத்திய சந்திப்புகளின்போது முன்வைக்கப்பட்ட மூன்று அம்சங்களே இச்சந்திப்பிலும் முன்வைக்கப்பட்டதால், அவற்றை உள்வாங்கி இலகுவாக தட்டி வீழ்த்துவது அவருக்கு சுலபமாகிவிட்டது. 

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக விபரிக்கும்போது இது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நாடாளுமன்ற தேர்தல் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அக்குழுவில் எழுப்பப்படும் விடயங்கள் குறித்து அவர்களுடன் கலந்துரையாட எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்து முதலாவது பந்தை இலகுவாக ஓரந்தள்ளி விட்டார். 

அடுத்து புதிய அரசியலமைப்பு பற்றி ஆராயப்பட்டது. ஜனாதிபதி முறையை ஒழிப்பது உள்ளிட்ட அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான தமது அரசின் உறுதிப்பாட்டை நம்பும்வகையில் வலியுறுத்திய அநுர குமர, அவசரமாக வரைபு செய்யப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை தொடர்வதைவிட, பரந்த தேசிய ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு உடனடி முன்னுரிமை வழங்க வேண்டியதே முக்கியமெனக்கூறி இரண்டாவது பந்தையும் இன்னொரு பக்கம் தள்ளிவிட்டார். (இவ்வேளையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிட்ட ஓர் அரசியல் கட்சியால் தன்னிச்சையாக அறிமுகப்படுத்தப்படாமல் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய உரையாடல் மூலம் உருவாக்கப்பட வேண்டுமென தமிழரசுக்கட்சி சார்பில் சுமந்திரன் எடுத்துக்கூறியது அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது). 

காணிப் பிரச்சனை பற்றி வடக்கு கிழக்கு மலையகம் என்ற வகையில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும் அந்தந்த பிரதேசங்களின் சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தமிழ்ப் பிரதிநிதிகளால் கவலைகள் எழுப்பப்பட்டது. கூட்டத்தின் முடிவில் நீண்டகால பிரச்சனைகளை உரையாடல் மூலம் தீர்ப்பதில் அரசாங்கம் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக ஜனாதிபதி அநுர குமர வலியுறுத்தினார் என்றும், பரந்த தேசிய நலன்களுக்கு பயனளிக்கும் தீர்வுகளை முன்னெடுக்குமாறு அரசியல் பிரதிநிதிகளை அவர் ஊக்குவித்தாரென்றும் அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கை சுட்டியுள்ளது. 

முன்னைய காலங்கள்போல வாய்மொழி வார்த்தைகள் வழியாக இணக்கம் காணப்பட்டது போன்றும் உறுதிமொழிகள் வழங்கப்பட்டது போன்றும் தோற்றம் காட்டப்பட்டிருப்பினும் இச்சந்திப்பில் திட்டவட்டமான எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. மாகாணசபை தேர்தல் எப்போது என்பது தெரியாது. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமா என்பதும் தெரியாது. பொதுமக்கள் காணிகள் அவர்களிடம் எப்போது மீளளிக்கப்படுமென்பதும் தெரியாது. அந்தவகையில் இந்தச் சந்திப்பு அநுர குமரவை பொறுத்தளவில் வெற்றிகரமான ஒன்று. 

இச்சந்திப்பு இடம்பெற்ற அதே காலப்பகுதியில் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கொழும்புக்கு மேற்கொண்ட பயணம் எதிர்பாராததா அல்லது முற்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்பது சரியாக தெரியவில்லை. ஆனாலும், ஆறு தமிழ் கட்சிகளின் பிரமுகர்களோடு இவரது சந்திப்பு விரைந்து இடம்பெற்றது. தங்கள் அரசியல் மனக்குறைகளை இச்சந்திப்பில் இந்திய வெளியுறவு செயலாளரிடம் இவர்கள் கொட்டித் தீர்த்தனர் என்றே கூறலாம். 

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி தம்மை சந்தித்த தமிழர் பிரதிநிதிகளிடம் விக்ரம் மிஸ்ரி வினவியபோது, இவ்விடயத்தில் தற்போதைய அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ விருப்பம் காணப்படவில்லையென்பதை அவர்கள் நேரடியாகவே அவரிடம் தெரிவித்தனர். 13ம் திருத்தத்தின் கீழ் மாகாண சபை தேர்தல் இடம்பெற வேண்டியதை வலியுறுத்திய இவர்கள் இவ்விடயத்தில் இந்தியா தனது பங்களிப்பை மேற்கொள்ள வேண்டுமென்று தெரிவித்தபோது, இத்தேர்தலை விரைவில் நடத்த இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் என உறுதியளித்தார். 

இதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி அநுர குமரவை சந்தித்தபோது மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென இந்திய வெளியுறவு செயலாளர் கூறியதாகவும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசியலமைப்பு ஏற்பாடுகளை முழுமையாக அமல்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. 

கடந்த பல ஆண்டுகளாக இதனையே இந்தியா கூறிவருகிறது. ஆனால் இலங்கை அரசு இதனையிட்டு பெரிதும் ஆர்வம் காட்டுவதாகவோ அல்லது இந்தியாவை பகைக்காது அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாகவோ எதுவுமே காணப்படவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுடன் இந்திய பிரதமர் நெருக்கமான பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அவ்வேளையிலும்கூட பிரதமர் மோடி மாகாண சபை தேர்தல் பற்றியோ தமிழர் பிரச்சனை தீர்வு பற்றியோ தம்மிடம் எதுவும் கூறவில்லையென ரில்வின் சில்வா பகிரங்கமாக ஊடகங்களுக்கு அறியக் கொடுத்திருந்தார். 

சகல தமிழ் கட்சிகளின் பிரமுகர்களையும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்பில் சில மாதங்களுக்கு முன்னர் சந்தித்து உரையாடியபோது மாகாண சபை தேர்தல்கள் பற்றியும் 13ம் திருத்தம் பற்றியும் அலசப்பட்டது. அப்போது அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளிக்கையில், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட ஒப்பந்தம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அதன் பின்னர் எத்தனையோ மாற்றங்கள் வந்துவிட்டன என்று அவர் கூறியதன் அர்த்தத்தை தமிழர் பிரதிநிதிகள் நிச்சயம் புரிந்திருப்பார்கள். 

இப்போதுள்ள நிலைமை என்ன? உள்ளகத்தில் எதற்கும் உத்தரவாதமில்லை. அயலகத்தில் நம்பகத்தன்மை இல்லை. எவருடன் மனம் விட்டுப் பேசியும் எதனையும் பெறமுடியாத நிலை. யார் கொலோ சதுரர்?

No comments