ஜப்பானில் வரலாறு காணாத மழையால் நால்வர் உயிரிழப்பு


கிழக்கு ஜப்பானில் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், டோக்கியோவின் நரிட்டா விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் இரவு முழுவதும் சிக்கித் தவித்ததாலும் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

டோக்கியோவை ஒட்டியுள்ள சிபா மாகாணத்தின் சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் 36 சென்டிமீட்டருக்கும் (14 அங்குலம்) அதிகமான மழை பெய்ததால், நிலச்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, கிட்டத்தட்ட 25,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைபட்டது.

வெள்ளம் சூழ்ந்த சாலையில் கண்டெடுக்கப்பட்ட 60 அல்லது 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், நீரில் மூழ்கிய தனது காரில் கண்டெடுக்கப்பட்ட 66 வயது மூதாட்டி ஒருவரும் உறுதிசெய்யப்பட்ட உயிரிழப்புகளில் அடங்குவர் என சிபா மாகாண பேரிடர் மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது. 

மூன்றாவது பலியானவர், வயது அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தெருவில் சரிந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். நான்காவது பலியானவரின் வயது மற்றும் பாலினம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது. ஐந்தாவது நபர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது, ஆறாவது நபரைக் காணவில்லை. நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக இராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

No comments