கனடா முதலீட்டை வரவேற்கும் வடக்கு!
வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில், கனடாவில் வசிக்கும் தமிழ் மக்களையும் கனேடிய முதலீட்டாளர்களையும் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில், வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மூன்று முதலீட்டு வலயங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து கனேடிய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த முதலீட்டு வலயங்கள் வடக்கின் முதலீட்டு சூழலை விரிவுபடுத்துவதுடன், புதிய தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பங்களிக்கும் என ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம் பெருமளவில் விவசாயம் மற்றும் கடற்றொழிலைச் சார்ந்துள்ள நிலையில், மூலப்பொருட்களாக ஏற்றுமதி செய்யப்படுகின்ற உற்பத்திகளை பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களாக மாற்றுவதற்கான தொழிற்சாலைகள் வடக்கில் அதிகளவில் உருவாக்கப்பட வேண்டியுள்ளதாகவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு தற்போது சாதகமான சூழல் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், புலம்பெயர் தமிழர்கள் முதலீடு, தொழில் முயற்சி, அறிவு மற்றும் தொழில்நுட்பப் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற சந்திப்பு ஆண்டின் ஜனவரி 26ஆம் தேதி இடம்பெற்றதாகவும், அதில் வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment