பலாலி நட்டஈடு:தள்ளாடுகின்றது!
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு அபிவிருத்தித் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட தமிழ் மக்களது காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் இலங்கை அரசின் முயற்சி மக்களது எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.
பலாலி மேற்கு, மயிலிட்டி வடக்கு, தென்மயிலை மற்றும் குரும்பசிட்டி ஆகிய நான்கு கிராம சேவகர் பிரிவுகளில், 1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலைய விரிவாக்கத்திற்காக வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரிக்கப்பட்ட 267 ஏக்கர் காணிகளின் 436 காணி உரிமையாளர்கள் நட்ட ஈடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
1986ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு 2022ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, இழப்பீடு வழங்குவதற்கான சத்தியக்கடதாசியில் கையொப்பமிடுமாறு காணி உரிமையாளர்களிடம் கோரப்பட்டது.
எனினும், ஒவ்வொரு காணிக்கும் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு விபரங்கள் வழங்கப்படாத நிலையில் சத்தியக்கடதாசியில் கையொப்பமிட முடியாது என காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சத்தியக்கடதாசியின் உள்ளடக்கம் தெளிவற்றதாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியதால் கூட்டத்தில் பரபரப்பும் குழப்பநிலையும் ஏற்பட்டது.
குழப்பநிலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கூட்ட மண்டபத்திற்குள் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
சில காணி உரிமையாளர்கள் இழப்பீடு பெறுவதில் இணக்கம் தெரிவிக்காமல் கூட்டத்திலிருந்து வெளியேறினர். அவர்கள், காணிகளை மீள வழங்கி மீளக் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதன் பின்னரே விமான நிலையத் தேவைக்காக காணிகளை வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என்றும் வலியுறுத்தியே வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment