தையிட்டி :பவானி வீதி தடையில்லை!
வலிகாமம் வடக்கில் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பவானி வீதியை மீள கையகப்படுத்தும் பிரதேசசபையின் நடவடிக்கைக்கு எதிராக இலங்கை காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வழக்கின் பிரதிவாதிகளான வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தையிட்டி திஸ்ஸ விகாரைப்பகுதியிலுள்ள பிரதேச சபை வீதியான பவானி வீதியில் பிக்குவினால் ஏற்படுத்தப்பட்ட தடை தொடர்பாக பிரதேச சபைகள் கட்டளை சட்டத்தின் கீழ் பிரதேச சபையினால் மீளத்திறந்து விடுவது தொடர்பில் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
அவ்வறிவித்தலானது சமாதான சீர்குலைவை ஏற்படுத்தும் என்று தெரிவித்து கடந்த மே 10ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் இலங்கை காவல்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கில் பிரதிவாதிகளாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
எனினும் இருவரும் நியதிச் சட்டத்தை நிறைவேற்றுகின்ற நிலையில் உள்ளவர்கள். ஒரு பகிரங்க அதிகார சபையினால் எடுக்கின்ற தீர்மானமானத்தை எழுத்தாணை வழக்கு ஒன்றின் மூலமே கேள்விக்கு உட்படுத்த முடியும்.
அதாவது வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்திலேயே இது தொடர்பான வழக்கினை தாக்கல் செய்ய முடியும். காவல்துறையினரும் ஒரு அரச திணைக்களத்தை சார்ந்தவர்கள்.
ஒரு அரச திணைக்களம் இன்னொரு அரச திணைக்களத்துக்கு எதிராக வழக்கினை கொண்டுவர முடியாது என்ற விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் சமாதான குலைவை ஏற்படுத்துவதற்கான ஆதாரத்தை, வழக்கு தொடுநரான காவல்துறையினர் முன்வைத்திருக்கவில்லை என்ற அடிப்படையில் வழக்கினை தள்ளுபடி செய்து இருவரையும் நீதிமன்றமானது வழக்கிலிருந்து இன்று விடுவித்துள்ளது.

Post a Comment