மீண்டும் சந்திரசேகரனின் நாடகம் அம்பலம்!
அனுர அரசு அரங்கேற்றிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களிற்கான நிவாரண நாடகத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் முற்றாக மீண்டும் நிராகரித்துள்ளன.
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதி கோரியும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படடுள்ளது.
வடக்கு–கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனிடையே போராட்டகாரர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினுள் நுழைய முற்பட்ட நிலையில் அவர்களை பலாத்காரமாக இலங்கை காவல்துறையினர் வெளியேற்றியிருந்தனர்.
சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறையான அலுவலகம் வழங்கும் மரணச் சான்றிதழ்களோ அல்லது இழப்பீட்டுத் தொகையோ தமக்குத் தேவையில்லை என உறவினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
சர்வதேச நீதி கோரிக்கை: இராணுவத்தினரிடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனவும், சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை மூலமே தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு–கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.

Post a Comment