விலை கொடுத்து விரைவு உணவுகளை வாங்கி நோய்களை வளர்க்கின்றோம்


வீடுகளில் இலவசமாகக் கிடைக்கும் சத்துள்ள இலைவகைகளை விடுத்து விலை கொடுத்து விரைவு உணவுகளை வாங்கி நோய்களை வளர்க்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார் 

வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனை வளாகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற போசாக்குக் கண்காட்சியில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

போர்க் கால இடம்பெயர்வுகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாகக் கடந்த காலத்தில் பலரும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர். போர் முடிவடைந்து பல வருடங்கள் கடந்த நிலையிலும், இன்றும் சிலர் இத்தகைய குறைபாடுகளுடன் காணப்படுவதை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். போசாக்கின்மையால் பிறக்கும் குழந்தைகள் கல்வியிலும் ஏனைய துறைகளிலும் தொடர்ந்தும் பின்தங்கும் நிலையே ஏற்படும்.

இன்று இளைய பிள்ளைகள் விலை கொடுத்து துரித உணவுகளைத் தேடிச் செல்வதைத் தவிர்த்து, எமது வீடுகளிலும் வளவுகளிலும் இலவசமாகக் கிடைக்கும் சத்துள்ள இலைகளையும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அரசு மதிய உணவுக்காக பெருமளவு நிதியை ஒதுக்குகின்ற நிலையில், பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு அவசியமான போசாக்குள்ள உணவுகளைத் திட்டமிட்டு வழங்குவதன் மூலமே அவர்களை ஆரோக்கியமானவர்களாக உருவாக்க முடியும் என தெரிவித்தார்.

No comments