செம்மணியில் சான்றாக மோதிரங்கள்
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 35ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, புதிதாக 11 மனித என்புக் கூடுகள் உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.அதேபோன்று விரல் எலும்புடன் கூடிய செப்பு மோதிரம் உள்ளிட்ட தடயங்களும் மீட்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில், விசேட சட்ட மருத்துவ மற்றும் தடயவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய அகழ்வுகளின் போது புதைகுழிப் பரப்பிற்குள் இருந்து புதிதாக 11 மனித என்புக் கூடுகள் உத்தியோகபூர்வமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் குவியலாகக் காணப்பட்ட மேலும் இரண்டு தொகுதி என்புக் கூடுகளும் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே கடந்த நாட்களில் அடையாளப்படுத்தப்பட்டிருந்த என்புக் கூடுகளில் இருந்து, இன்றைய தினம் மேலும் 7 மனித என்புக் கூடுகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளன.
படுகொலை செய்யப்பட்டவர்களின் உடமைகளாகக் கருதப்படும் சிதைவடைந்த மோதிரம் ஒன்றும், மனித விரல் எலும்புடன் கூடிய செப்பிலான மோதிரம் ஒன்றும் சான்றுப் பொருளாக மீட்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை மொத்தம் 431 மனித எண்புக் கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
வெளியில் எடுக்கப்பட்டவை: அடையாளம் காணப்பட்டவற்றுள் மொத்தம் 423 மனித என்;புக் கூடுகள் மண்ணிலிருந்து முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

Post a Comment