சபேஸ்வரன் :சமரசமற்றவன்!
யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும், யாழ்.தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் சிஎம்ஆர் வானொலியின் முன்னாள் தமிழக செய்தியாளருமான ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்கள் நேற்றிரவு கனடாவில் காலமானார் .
தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய அவர், ஊடகவியலாளர்களின் குரலாகவும், அவர்களின் உரிமைப் போராட்டங்களில் முன்னின்று உழைத்த ஒரு சிறந்த ஆளுமையுமாவார் என யாழ்.ஊடக அமையம் தனது அஞ்சலிக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
யாழ்.ஊடக அமையத்தின் ஊடக சுதந்திரத்திற்கான பயணத்திலும் சர்வதேச நாடுகளது தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுடனான சந்திப்புக்களில் சபேசனின் வகிபாகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.வெளித்தெரியாத அத்தகைய சந்திப்புக்களில் சமரசமின்றி புள்ளி விபரங்கள் சகிதம் ஊடக அமையத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிடுவது சபேசனின் கைங்கரியங்களுள் ஒன்றாகும்.
யாழ்.ஊடக அமையம் கொழும்பு ஆட்சியாளர்களதும் அவர்களது எடுபிடிகளதும் அழுத்தங்களையும் நெருக்கடிகளை சந்தித்த வேளைகளில் எல்லாம் ஒற்றுமையாக சக ஊடகவியலாளர்களுடன் நின்று அடிபணியாது போராடவும் அவர் தவறவில்லை.
ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக தனது உயிரை கூட பொருட்படுத்தாது துணிவுடன் குரல் கொடுத்து அர்ப்பணிப்புடன் களத்தில் போராடுமொரு தலைவராகவும் திகழ்ந்தார்.
அவரது அர்ப்பணிப்புள்ள பணிகள் தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் அழியாத தடம் பதித்தவை.
போர் சூழலின் போதான அறிக்கையிடலின் போதும் சரி அரசு-புலிகள் சமாதான பேச்சுக்கால அறிக்கையிடல்களின் போதும் சரி சபேசனின் பங்கு வார்த்தைகளுள் அடங்காததொன்று.
கொழும்பு ஆட்சியாளர்களதும் அவர்களது எடுபிடிகளதும் அழுத்தங்களின் போது தனது ஊடகப்பணியை கைவிட மறுத்து தற்காலிகமாக தமிழகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டு உயிர் பாதுகாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுள் சபேசனுமொருவராவார்.
அதேவேளைதமிழ் ஊடகத் துறையில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவர், திறமையான பத்திரிகையாளராக மட்டுமன்றி, பல தலைமுறை ஊடகவியலாளர்களை உருவாக்கிய சிறந்த விரிவுரையாளராகவும் விளங்கியவர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஆசிரியராகப் பணியாற்றி, ஊடகக் கல்வி மற்றும் தொழில்முறை ஊடகவியல் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியவர்.
அவரது அர்ப்பணிப்பான சேவையும், எளிமையும், மனிதநேயமும் தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்குமென யாழ்.ஊடக அமையம் தெரிவித்துள்ளது.

Post a Comment