அகதிகள் படகுகள் கவிழ்ந்ததில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்


ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் அபாயகரமான சூழ்நிலைகளில் புறப்பட்டு, கவிழ்ந்திருக்கலாம் என ஐ.நா. தெரிவித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான ரோஹிங்கியர்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.

சமீப வாரங்களில் மியான்மர் கடற்கரைக்கு அப்பால், 500க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக , இரண்டு ஐ.நா. அமைப்புகள் வியாழக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இரண்டு கப்பல்களும் ஜூன் மாத இறுதியில் மியான்மரின் ராகைன் மாநிலத்திலிருந்து புறப்பட்டன. அவற்றில் பெரும்பாலும்  ரோஹிங்கியா  பயணிகள் இருந்தனர். அவர்களில், பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்து பயணம் செய்த சிலரும் அடங்குவதாகக் கூறப்படுகிறது என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

250 பேரை ஏற்றிச் சென்ற முதல் படகு கடலுக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே தொடர்பை இழந்தது. 280 பேரை ஏற்றிச் சென்ற மற்றொரு படகு, ஜூலை 8 அன்று மியான்மரின் அயேயார்வாடி கடற்கரைக்கு அருகே கவிழ்ந்திருக்கலாம் என சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) மற்றும் ஐ.நா அகதிகள் முகமை (UNHCR) தெரிவித்துள்ளன.

இந்தத் துயரச் சம்பவம் உறுதிசெய்யப்பட்டால், ரோஹிங்கியா அகதிகள் மற்றும் பங்களாதேஷ் நாட்டினர் உட்பட, இந்த ஆண்டு இதுவரை அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் காணாமல் போனதாக அல்லது உயிரிழந்ததாகக் கூறப்படும் சுமார் 300 பேரின் பட்டியலில் இதுவும் சேரும் என்று அந்தக் கூட்டறிக்கை மேலும் கூறியது. 

No comments