சிங்கப்பூரின் ரெட்ஹில் சந்தை அருகே குளவி கொட்டியதில் மருத்துவமனையில் நால்வர் அனுமதி!
சிங்கப்பூர் ரெட்ஹில் சந்தை அருகே குளவிகள் கொட்டியதில் நான்கு பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ரெட்ஹில் லேனில் பிற்பகல் சுமார் 1 மணியளவில் நடந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படைக்கும் தஞ்சோங் பாகர் நகர மன்றத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரெட்ஹில் லேன், பிளாக் 78-க்கும் ஷெல் பெட்ரோல் நிலையத்திற்கும் இடையேயான நடைபாதையில் உள்ள ஒரு மரத்தில் இருந்த கூட்டில் இருந்து குளவிகள் வந்ததாகக் கூறப்படுகிறது.
அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றி வளைத்து, பூச்சிக் கட்டுப்பாட்டு ஒப்பந்தக்காரரை வரவழைத்ததாகவும், அவர் கூட்டைப் பாதுகாப்பாக அகற்றியதாகவும் நகர சபை தெரிவித்தது.
10-க்கும் மேற்பட்ட குளவிகள் ஒரு 70 வயதுப் பெண்ணின் தலையைச் சுற்றி வட்டமிட்டதைத் தொடர்ந்து, அவரது காதுகள் சிவந்து, வீங்கி, இரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆக்ரோஷமான குளவிகளையோ அல்லது அவற்றின் கூட்டையோ எதிர்கொள்ளும் பொதுமக்கள், உடனடியாக அங்கிருந்து விலகிச் செல்லவும், அருகிலுள்ள கட்டிடத்தில் தஞ்சம் புகவும், அவற்றைத் தொந்தரவு செய்வதைத் தவிர்க்கவும் வேண்டும் என நகர சபை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளவி கொட்டியதால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறி, அவசர மருத்துவ உதவிக்கு 995 என்ற எண்ணை அழைக்க வேண்டும் என்று நகர சபை மேலும் கூறியது.

Post a Comment